கரூர்: `அதிக வட்டி வசூல்; கொலை மிரட்டல்!' – குவிந்த புகார்கள்… திமுக பிரமுகர் அதிரடி கைது!

கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள சிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருவேங்கடம். இவரது மனைவி சண்முகப்பிரியா தி.மு.க கடவூர் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். தனது மனைவி தி.மு.க-வில் ஒன்றிய துணைச் செயலாளர் பொறுப்பில் இருப்பதை வைத்து மக்கள் பணி செய்வதாக கூறி, தி.மு.க கட்சியின் கரவேட்டியை கட்டிக்கொண்டு, பண தேவை உள்ளவர்களை கண்டறிந்து குறைந்த வட்டிக்கு பணம் கொடுப்பதாக திருவேங்கடம் ஆசை வார்த்தை கூறி உதவி செய்வதாக சொல்லி, கணக்கில்லாமல் கந்துவட்டி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், முறையாக வட்டி தொகை செலுத்தினாலும், வட்டிக்கு வட்டி கணக்கு செய்து கடன் தொகையை அசலில் சேர்த்து, குறிப்பிட்ட தேதிக்குள் கடன் தொகையை செலுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்து கடன் பெறுவோரை நெருக்கடிக்குள்ளாக்கி, பணம் வசூல் செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு ஒத்துவராதவர்களை பொது இடத்தில் வைத்து திட்டி அவமானப்படுத்துவதையும் வாடிக்கையாக வைத்து வந்துள்ளார் என்கின்றனர். இது குறித்து கேள்வி கேட்போரை தனது வீட்டுக்கு வரவழைத்து அங்கு தகாத வார்த்தைகளால் பேசி கடன் பெற்றவர்களை தாக்குவதாக, பாலவிடுதி காவல் நிலையத்தில் இவர்மீது பல்வேறு புகார்கள் குவிந்தது.

திருவேங்கடம்

இது குறித்து காவல்துறை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டி, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் மற்றும் புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்ட பிரோஸ் கான் அப்துல்லா ஆகியோரிடம் அடுத்தடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குடும்பத்துடன் கண்ணீர் மல்க கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு புகார் அளித்தனர். இந்நிலையில், கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள முள்ளிப்பாடி ஊராட்சி அங்கமுத்து மகன் கருப்புசாமி (வயது :59) என்பவரிடம், அவர் கடனாக வாங்கிய நான்கு லட்சத்தை திரும்ப செலுத்திய பிறகும், அசல் தொகை அப்படியே உள்ளது எனக் கூறி வெற்று பத்திரம் உள்ளிட்ட வீடு நிலம் சம்பந்தமான பத்திரங்களை, மிரட்டி வாங்கியதாக ஆகஸ்ட் 18 – ம் தேதி பாலவிடுதி போலீஸார் வழக்கு பதிவுசெய்து திருவேங்கடத்தைக் கைதுசெய்தனர். மேலும், குளித்தலை நீதிமன்றத்தில் திருவேங்கடத்தை ஆஜர் செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். பாலவிடுதி காவல் நிலையத்தில், ஆகஸ்ட் 19 – ம் தேதி மேலும் இரண்டு வழக்குகளை பதிவுசெய்து, திருவேங்கடத்தைக் கைதுசெய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.