பேட்டிங் பலவீனம் இதுதான்… சுட்டிகாட்டிய பயிற்சியாளர் – சரிசெய்யுமா இந்திய அணி?

India National Cricket Team: இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பையை கடந்த ஜூனில் கைப்பற்றியது. அதற்கு முன் கடந்தாண்டு நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும், ஐசிசி உலகக் கோப்பை தொடரிலும் இரண்டாம் இடத்தையும் பிடித்து மூன்று பார்மட்களிலும் வெறித்தனமான அணியாக வலம் வருகிறது. இருப்பினும், இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சிற்சில பிரச்னைகள் நிலவுகின்றன எனலாம். 

ராகுல் டிராவிட்டுக்கு பின் கௌதம் கம்பீர் (Gautam Gambhir) இந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (ICC Champions Trophy 2025) மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் (WTC Final 2025) வெற்றியை பெற்று கோப்பையை ருசிக்க வழிவகுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அவருக்கு உதவி பயிற்சியாளராக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோர் செயல்படுகின்றனர். சமீபத்தில் கூட இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மார்னே மார்கல் நியமிக்கப்பட்டார். 

இந்திய அணியின் பலவீனம்

அந்த வகையில், ரியான் டென் டோஸ்கேட் (Ryan ten Doeschate) சமீபத்தில் ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில் இந்திய அணியில் நிலவும் பேட்டிங் பிரச்னை குறித்து பேசியுள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில்,”இலங்கைக்கு எதிராக நாங்கள் படுதோல்வியை சந்தித்தோம். இந்திய அணியின் ஒட்டுமொத்த மனநிலையானது வெளிநாட்டில் சிறப்பாகச் விளையாட வேண்டும் என்பதாகவே இருக்கிறது. 

அதிலும் குறிப்பாக, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் அவர்கள் அதிகம் கவனம் செலுத்தினார்கள். இதனால், இந்திய அணியின் (Team India) சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதில் பலமான அணி என்ற நிலை, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பின்னடைவை சந்தித்திருக்கிறது. இந்திய அணியின் மீண்டும் உலகத்தர சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக கையாளும் நிலைக்கு கொண்டுச்செல்வதற்கு நான் உதவ விரும்புகிறேன்” என்றார். 

மனநிலை முக்கியம்

சமீபத்தில் இலங்கைக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 0-2 என்ற கணக்கில் இழந்தது. இந்த தொடரில் மொத்தம் 30 விக்கெட்டுகளில் 27 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சாளர்களிடமே இந்திய அணி இழந்தது நாம் கவனிக்க வேண்டிய விஷயமாகும். 

மேலும் தொடர்ந்த அவர்,”இந்திய அணிக்குள் நாங்கள் கிரிக்கெட்டில் தொழில்நுட்பம் சார்ந்த அறிவை கொண்டு வரப் போகிறோம் என்று நான் நினைக்கவில்லை. அணியின் மனநிலை, சூழ்நிலை விழிப்புணர்வு மற்றும் விளையாட்டின் சில கட்டங்களை அவர்கள் எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்பதைதான் நாங்கள் அணிக்கு பங்களிப்பாக வழங்க நினைக்கிறோம். எங்களின் யோசனைகளை அவர்களிடம் கடத்த வேண்டும். விளக்கமளிப்பதும் மற்றும் அணியின் சூழலை நன்றாக வைத்திருத்தல் ஆகியவைதான் மிகவும் முக்கியமானதாக இருக்கும்” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.