“காவிரி பிரச்சினையில் இரு மாநிலங்கள் இடையே விரைவில் ஒருமித்த கருத்து” – திருச்சியில் தேவகவுடா நம்பிக்கை

திருச்சி: “காவிரி பிரச்சினை குறித்து இரு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும் நாள் விரைவில் வரும், அன்று அந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்,” என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக பெங்களூரிலிருந்து தனி விமானம் மூலம் முன்னாள் பிரதமர் தேவகவுடா இன்று (ஆக.22) திருச்சிக்கு வருகை தந்தார். விமான நிலையத்திலிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்த அவர் ரங்கநாதர், தாயார் உள்ளிட்ட சன்னதிகளுக்கு பேட்டரி கார் மூலம் சென்று தரிசனம் மேற்கொண்டார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை, சால்வை உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு, சந்தன அபயஹஸ்தம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த தேவகவுடா கூறியது: “ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற கோயிலாக உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்துள்ளேன். எனது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்திய மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். தொடர்ந்து கருணாநிதிக்கு நாணயம் வெளியிடப்பட்டது குறித்த கேள்விக்கு, நான் தற்போது வந்துள்ளது சுவாமியை தரிசனம் செய்யவே, கருணாநிதி நினைவு நாணயம் வெளியிட்டது உள்ளிட்ட எவ்வித அரசியல் குறித்தும் கருத்து சொல்ல விரும்பவில்லை,” என்றார்.

கர்நாடகத்திலிருந்து உபரி நீர் தான் தமிழகத்துக்கு வழங்கப்படுகிறது என்ற கேள்விக்கு, “காவிரி பிரச்சினை குறித்து தமிழகத்தில் தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்கும், முன்பு ஆட்சி செய்தவர்களுக்கும் முழுமையான விவரங்கள் தெரியும். பெங்களுரூவில் மட்டும் 1.40 கோடி மக்கள் வசிக்கின்றனர். அங்கு அனைவருக்கும் முழுமையான குடிநீர் கிடைக்காமல் அவதியடைகின்றனர். இதில் ஒளிவுமறைவு எதுவும் இல்லை. அனைவரும் அறிந்தது தான். இது தமிழகத்தில் ஆளும் கட்சிகளுக்கு தெரியும். மேலும், கர்நாடகத்தில் உள்ள பெங்களுரூ உள்ளிட்ட 9 மாவட்டங்கள் குடிநீருக்காக கஷ்டப்பட்டு வருகின்றனர்.காவிரி பிரச்சினையில் இரு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும், அந்த நாள் விரைவில் வரும். அப்போது இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்,” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.