தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் 21-வது பொதுக்குழு கூட்டம், சென்னையில் நடைபெற்றது.
நடிகர் சிவகுமார், காதாசிரியர் கலைமணி, பாடலாசிரியர்கள் முத்துலிங்கம், பூவை செங்குட்டுவன் எனப் பலரும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் மூத்த எழுத்தாளரான காரைக்குடி நாராயணன் கௌரவிக்கப்பட்டார். எழுத்தாளர் சங்கத்தில் 203 கதைகளைப் பதிவு செய்து சாதனை படைத்திருக்கிறார் என்பதற்காக அவரை கௌரவித்துள்ளனர்.
தமிழ்த் திரையுலகின் ரைட்டர்களின் தனித்துவமான சங்கம் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தை சொல்லலாம். உதவி இயக்குநர்களின் கதை திருட்டு பிரச்னை எழும்போதெல்லாம் அவர்கள் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தைத்தான் நம்பிக்கையுடன் நாடுவார்கள். பெப்சியின் கீழ் இயங்கும் இச்சங்கத்தின் தலைவராக இயக்குநர் கே.பாக்யராஜை செயல்பட்டு வருகிறார். துணைத் தலைவர்களாக ‘யார்’ கண்ணனும், ரவிமரியாவும் உள்ளனர். செயலாளராக லியாகத் அலிகானும், பொருளாளராக பாலசேகரனும் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் தவிர இயக்குநர்கள் சரண், பேரரசு, சிங்கம்புலி, ஏ.வெங்கடேஷ், சாய்ரமணி, ராதாரவி பாலாஜி சக்திவேல், பட்டுக்கோட்டை பிரபாகர், அஜயன் பாலா, ஹேமமாலினி, பாடலாசிரியர் விவேகா என பலரும் பொறுப்புகளில் உள்ளனர். இந்த சங்கத்தின் 21-வது ஆண்டு பொதுக்குழு சென்னையில் நடந்தது. பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.
பொதுக்குழுவில் என்ன நடந்தது என்பது குறித்து சங்கத்தின் துணைத் தலைவரும், இயக்குநரும், நடிகருமான ரவி மரியாவிடம் பேசினோம்.
”பொதுக்குழுவில் மூத்த கதாசிரியர் காரைக்குடி நாராயணன் அவர்களைப் பாராட்டி கௌரவித்தோம். ராஜாஜியின் ‘திக்கற்ற பார்வதி’, ‘அச்சாணி’, ‘மீனாட்சி குங்குமம்’ ‘தீர்க்க சுமங்கலி’, ‘தூண்டில் மீன்’ உள்பட பல படங்களுக்குக் கதை, வசனம் எழுதிய பெருமை காரைக்குடி நாராயணன் சாருக்கு உண்டு. அவர் சங்கத்தில் 203 கதைகளைப் பதிவு செய்து, சாதனை படைத்திருக்கிறார். அதனால் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த நினைத்தோம். அதை இந்தப் பொதுக்குழுவில் வைத்து அவருக்கு மோதிரம் அணிவித்துப் பாராட்டினோம்.
திரைப்பட சங்கங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு சங்கத்திற்கும் இரண்டு வருஷத்துக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். இப்போ பெப்சி விதிமுறைப்படி 2026ல மூணு வருஷத்துக்கு ஒருமுறை தேர்தல் நடத்தணும்னு சொல்லியிருக்காங்க. ரைட்டர்ஸ் யூனியனின் இப்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாசத்தோடு நிறைவடையுது. அக்டோபரில் இருந்து புது நிர்வாகிகள் தேர்தல் நடத்தபட வேண்டும். மீண்டும் தேர்தல் நடத்தி சங்க பணம் செலவழிக்கப்பட வேண்டுமா? இப்போதைய நிர்வாகமே சிறப்பானதாக இருக்கிறது என பொதுக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் ஏகோபித்த கருத்துக்களை தெரிவித்ததுடன், இந்த நிர்வாகமே மீண்டும் தொடர வேண்டும் என விரும்பினார்கள்.
இப்படியொரு சூழலில் இப்போதுள்ள நிர்வாகிகளே, பதவியைத் தொடர பொதுக்குழுவில் உறுப்பினர்கள் அமோக அனுமதி கொடுத்ததால துணைத் தலைவராக இரண்டாவது முறையாக நானும் பொறுப்பு வகிக்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. இயக்குநர்கள் சங்கத்திற்கும், ரைட்டர்கள் சங்கத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இருப்பதால், இரண்டு சங்கங்களிலுமே சலுகைக் கட்டணத்தில் உறுப்பினர்களாக முடியும். ரைட்டர்ஸ் யூனியன் உறுப்பினர்கள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 1500 செலுத்தியிருக்கோம்.
எங்க ரைட்டர்ஸ் யூனியனைப் பொறுத்தவரையில் கதைப் புகார்கள் அத்தனையும் தீர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. சங்கத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கும். இதில் உதவி இயக்குநர்கள் தங்கள் கதைகளைப் பதிவு செய்தவுடன், உறுப்பினர்களாகிவிடுவார்கள். அவர்களின் பெயர் திரையில் கதை, திரைக்கதை, பாடல், வசனம், இயக்கம் என எதாவது ஒரு வகையில் இடம்பெறும் போது, சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்களாகி விடுகிறார்கள். உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு வருஷா வருஷம் கல்வி உதவித் தொகை கொடுத்து வருகிறோம்.’ இதுல ஒரு விசேஷம், எத்தனை பேர் கல்வி விண்ணப்பித்திருந்தாலும், அத்தனை பேருக்கும் கல்வி உதவித்தொகை அளித்து வருகிறோம். பாக்யராஜ் சார் மூன்றாவது முறை தலைவராகவும், நான் இரண்டாவது தடவையாக துணைத் தலைவராகவும் செயல்படுவது சந்தோஷமா இருக்கு” என நெகிழ்கிறார் ரவிமரியா. அவர் இப்போது எழிலின் இயக்கத்தில் ‘தேசிங்கு ராஜா2’வில் முக்கியமான காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது தவிர அரை டஜன் படங்களும் கைவசம் வைத்துள்ளார்.