ஊட்டி: மீன் துண்டுகளில் விஷம், உயிரிழந்த வளர்ப்பு நாய்கள்; சிக்கிய கடமான் கொம்புகள் – என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள எமரால்டு பகுதியில் வளர்ப்பு நாய்கள் சில மர்மமான முறையில் இறந்து கிடந்தன. உணவில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற விவசாயியின் தோட்டத்தில் எலிகளை கட்டுப்படுத்த மீன் துண்டுகளில் விஷம் வைத்ததும், அதை நாய்கள் உண்டு இறந்ததையும் கண்டறிந்து உறுதி செய்துள்ளனர் வனத்துறையினர். தொடர்ந்து அந்த நபரின் வீடு மற்றும் தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டதில் கடமான் கொம்புகள் இருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கைதான சதீஷ்

இது குறித்து தெரிவித்த நீலகிரி வனக்கோட்ட அதிகாரிகள், “4 வளர்ப்பு நாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருந்த நிலையில், அவற்றை வனவிலங்குகள் உண்டு பாதிப்பு ஏற்படலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாரணை மேற்கொண்டோம். எமரால்டு பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவரை கைதுசெய்து வாக்குமூலம் பெற்றோம்.

அவரது கேரட் தோட்டத்தில் எலி தொல்லையின் காரணமாக மீன் துண்டுகளுக்கு விஷம் தடவி வைத்திருந்ததும், அதனால் நான்கு வளர்ப்பு நாய்கள் இறந்ததும் விசாரணையில் உறுதிசெய்யப்பட்டது. வன உயிரின வழக்கு WLOR 2/2024 பதிவு செய்தோம்.‌ ஊட்டி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட கடமான் கொம்புகள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் ” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.