கட்டணமின்றி சுற்றுலா விசாக்களை வழங்குவது தொடர்பாக, ஏனைய நாடுகள் பின்பற்றும் முறைகளை ஆராய்ந்து பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிபுணர் குழுவை நியமிப்பதற்கு 25.04.2024 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைத்ததாக தெரிவித்த அமைச்சர், சுற்றுலாத்துறையில் இலங்கையுடன் போட்டியிடும் 8 நாடுகளின் நிலவரம் குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கையொன்றை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் 2024.10.01 ஆம் திகதி முதல் தெரிவு செய்யப்பட்ட 35 நாடுகளுக்கு 6 மாத காலத்திற்கு, 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் இலவசமாக விசா வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.