‘பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடும் சட்டம் இயற்றுக!’ – பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்

கொல்கத்தா: பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். மேற்கு வங்க முதல்வரின் தலைமை ஆலோசகர் அலபன் பந்தோபாத்யாய் செய்தியாளரிடம் இதனைத் தெரிவித்தார். மேலும், அந்தக் கடிதத்தையும் அவர் வாசித்தார்.

அந்தக் கடிதத்தில் மம்தா பானர்ஜி, “நாடு முழுவதும் நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்த வழக்குகள் கவலை அளிப்பதாக உள்ளன. கிடைக்கக்கூடிய தரவுகளின்படி தினமும் கிட்டத்தட்ட 90 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன. பலசமயங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் கொல்லப்படுகின்றனர். இந்தப் போக்கு அச்சம் அளிப்பதாக இருக்கிறது. இது சமூகம் மற்றும் தேசத்தின் நம்பிக்கையையும் மனசாட்சியையும் உலுக்குகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது நமது கடமையாகும். இதன் மூலமே பெண்கள் பாதுகாப்பை உணர்வார்கள். இந்த கொடூரக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மிகப் பெரிய தண்டனையை பரிந்துரைக்கும் கடுமையான மத்திய சட்டத்தின் மூலம் இத்தகைய தீவிரமான பிரச்சினைக்கு விரிவான தீர்வு காணப்பட வேண்டும். இந்த வழக்குகளை விரைவாக முடிக்க விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு, 15 நாட்களுக்குள் வழக்குகள் முடிக்கப்பட வேண்டும்” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.