மும்பை,
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய அணிக்காக மிகச் சிறப்பான பணியை இவர் செய்து வந்துள்ளார். டிராவிட் தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு ஐ.சி.சி. தொடர்களில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தாலும் கோப்பைகளை வெல்ல முடியவில்லை என்ற குறை நீடித்து வந்தது. அந்த குறையையும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வந்தது. வெற்றிகரமாக பயிற்சியாளராக தனது பயணத்தை முடித்து இந்திய அணியில் இருந்து வெளியேறி உள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக செய்ய முடியாத சாதனையை, பயிற்சியாளராக செய்து ராகுல் டிராவிட் அசத்தியுள்ளார். 2007-ல் ஒருநாள் உலகக்கோப்பையில் தோல்வியை சந்தித்த அதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இம்முறை டிராவிட் பயிற்சியாளராக டி20 உலகக்கோப்பையை வென்று அசத்தியுள்ளார்.
மும்பையில் சியாட் விருது விழா நடைபெற்றது. இந்த விருது விழாவில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இந்திய வீரர்களான முகமது ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ராகுல் டிராவிட்டிடம், உங்களின் வாழ்க்கையை படமாக எடுத்தால் எந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நல்ல சம்பளம் கொடுத்தால் நானே நடிக்க தயார்” என்று சிரித்தபடியே பதிலளித்தார்.