புதுடெல்லி: கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டதால், டெல்லி, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களிலும் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மேற்கு வங்கத்தில் மட்டும் மருத்துவர்கள் வாபஸ் பெற மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர்மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல்வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள்பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் இந்த வழக்கு விசாரணை நேற்று தொடர்ந்தது. அப்போது, சிபிஐ தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது.
சிபிஐ சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது: பெண் பயிற்சி மருத்துவரின் உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு, நள்ளிரவு 11.45 மணி அளவிலேயே இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. முதலில் இதை தற்கொலை என பெண் மருத்துவரின் பெற்றோரிடம் போலீஸார் தெரிவித்துள்ளனர். பிறகுதான் கொலை என்று கூறியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், நீதிபதிகள் கூறியதாவது: பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட அன்று மாலை 6.10மணி அளவில் பிரேத பரிசோதனை நடந்துள்ளது. ஆனால்,கொல்கத்தா காவல் நிலையத்துக்கு இதுகுறித்த தகவல் இரவு 11.30 மணிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது.
அதிகாரி ஆஜராக உத்தரவு: நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த பாலியல்வன்கொடுமை, கொலை வழக்கை பதிவு செய்த கொல்கத்தா போலீஸ் அதிகாரி, அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராகி, வழக்கு பதிவு செய்த நேரத்தை தெரிவிக்க வேண்டும்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என நாங்கள் உறுதி அளிக்கிறோம். நீங்கள் பணிக்கு திரும்பியவுடன், உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என மருத்துவமனை நிர்வாகத்தை வற்புறுத்துவோம்.
மருத்துவர்கள் தங்கள் பணியை செய்யாவிட்டால் மருத்துவமனைகள் எப்படி இயங்கும். மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும்நோயாளிகள் பற்றிதான் எங்களதுகவலை உள்ளது.
எனவே, மருத்துவர்கள் முதலில் பணிக்கு திரும்ப வேண்டும். அதன்பிறகு, ஏதாவது பிரச்சினை இருந்தால் எங்களிடம் வாருங்கள். மருத்துவர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமைக்கப்பட்டுள்ள தேசிய குழு உங்களது கருத்துகளை கேட்கும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
போராட்டத்தை கைவிட்டு மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்ததை தொடர்ந்து, டெல்லி, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களிலும் போராட்டத்தை மருத்துவர்கள் வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.
ஆனால், போராட்டத்தை வாபஸ் பெற மேற்கு வங்க மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். அங்கு போராட்டம் நீடிக்கிறது.
மருத்துவ கல்லூரியில் 3 பேர் இடமாற்றம்: மேற்கு வங்கத்தில் போராட்டம் நடத்திய மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று, கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சுஹிர்தா பால், துணை முதல்வர் புல்புல் முகோபாத்யாய், முன்னாள் முதல்வர் டாக்டர் சந்தீப் கோஷ் ஆகியோரை மேற்கு வங்க அரசு இடமாற்றம் செய்துள்ளது. கல்லூரியின் புதிய முதல்வராக மானஸ் குமார் பந்த்தோபாத்யாய் பொறுப்பேற்றுள்ளார். துணை முதல்வர் பதவிக்கு சப்தரிஷி சாட்டர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் 4 மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ வேண்டுகோள் விடுத்துள்ளது. நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகு அதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என தெரிகிறது