அறிவியல் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

புதுடெல்லி: அறிவியல் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு, ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று வழங்கினார்.

ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினத்தில் ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுகள் வழங்கப்படும் என மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்பில் சாதனை படைப்பவர்களை அங்கீகரிக்கும் வகையில், விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் , விஞ்ஞான் யுவ-சாந்திஸ்வரூப் பட்னாகர் மற்றும் விஞ்ஞான் குழு ஆகிய 4 பெயர்களில் இந்த விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, முதன் முறையாக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கானதந்திர மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பெங்களூரு ஐஐஎஸ்சி முன்னாள் இயக்குநர் கோவிந்தராஜன் பத்மநாபனுக்கு நாட்டின் உயரிய அறிவியல் விருதாக கருதப்படும் விஞ்ஞான் ரத்னாவிருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.

பெங்களூரில் உள்ள வான்இயற்பியல் மையத்தின் இயக்குநர் அன்னபூரணி சுப்ரமணியம், திருவனந்தபுரத்தில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் அனந்த ராமகிருஷ்ணன், பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் ரசாயனப் பிரிவு இயக்குனர் அவேஷ் குமார் தியாகி, லக்னோவில் உள்ள சிஎஸ்ஐஆர் – தேசிய தாவரவியல் ஆய்வு மையத்தை சேர்ந்த பேராசிரியர் சையது வாஜி அகமது நக்வி உட்பட 13 பேர் விஞ்ஞான் ஸ்ரீ விருதுகளை பெற்றனர்.

புனேவில் உள்ள வானியல் மைய விஞ்ஞானி ராக்ஸி மேத்யூகோல், சென்னை ஐஐடி பேராசிரியர்கள் ராதாகிருஷ்ண காந்தி, பிரபு ராஜகோபால், கரோனா தடுப்பூசி தயாரிப்பில் முக்கிய பங்காற்றிய புனே ஐசிஎம்ஆர் தேசியவைராலஜி மையத்தின் பிரக்யா துருவ் யாதவ் உட்பட 18 பேர் விஞ்ஞான் யுவ-சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருதுகளை பெற்றனர்.

சந்திரயான்-3 திட்டத்தில் பணிபுரிந்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் குழுவுக்கு விஞ்ஞான்குழு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இவ்விருதை இந்த திட்டத்தின் இயக்குநர் பி.வீரமுத்துவேல் பெற்றுக் கொண்டார். விருதுபெற்ற அனைவருக்கும் பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.