அகர்தலா: திரிபுராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். 65 ஆயிரம் பேர் இருப்பிடங்களை விட்டு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் இந்த வார தொடக்கத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த மழையால் இதுவரை மாநிலம் முழுவதும் 17 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 22 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 450 நிவாரண முகாம்களில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அகர்தலாவை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களுக்கு விமானம் மூலம் உணவு, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா அறிவித்துள்ளார். முன்னதாக கனமழையால் 12 பேர் உயிரிழந்ததாகவும், இரண்டு பேரை காணவில்லை என்றும் வருவாய்த் துறை செயலர் பிரிஜேஷ் பாண்டே தெரிவித்திருந்தார்.