`பரியேறும் பெருமாள்’, `கர்ணன்’, `மாமன்னன்’ திரைப்படத்தை எடுத்த மாரி செல்வராஜின் ‘வாழை’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
மாரி செல்வராஜின் சிறுவயது வாழ்க்கை அனுபவத்தை மையமாக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம். நேற்று (ஆகஸ்ட் 22ம் தேதி) இப்படத்தின் பிரத்யேகக் காட்சி சென்னையில் திரையிடப்பட்டது. திரையுலகைச் சேர்ந்த பலரும் இப்படத்தைப் பார்த்து மாரியை ஆரத்தழுவி அன்பு முத்தங்களைப் பொழிந்தனர். தனது திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை மனம் உறுகி அழ வைத்த இயக்குநர் பாலா, ‘வாழை’ படத்தைப் பார்த்துவிட்டு கண்ணீர் உறைந்து நின்ற காணொலி சமூகவலைதளங்களில் வைரலாகியிருந்தது. திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் மாரியின் சிறுவயது அனுபவங்களை திரையில் பார்த்து நெகிழ்ந்து பாராட்டினர். ‘வாழை’ வெற்றி பெற தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
இன்று (ஆகஸ்ட் 23ம் தேதி) இப்படம் திரையரங்களில் வெளியாகியிருக்கிறது. முதற்காட்சியைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இயக்குநர் மாரி செல்வராஜையும், ‘வாழை’ படத்தையும் பாராட்டி வருகின்றனர். இப்படம் குறித்த நல்ல விமர்சனங்கள் வந்த வண்ணமிருக்கின்றன.
இந்நிலையில் இன்று ‘வாழை’ படத்தின் முதற்காட்சியை தனது சொந்த ஊரில், திருநெல்வேலி ராம் சினிமாஸ் தியேட்டரில் மக்களுடன் சேர்ந்து பார்த்தார் இயக்குநர் மாரி செல்வராஜ். இது மாரி செல்வராஜின் கதை மட்டுமல்ல, தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி மக்களின் சொல்லப்படாத கதை. இதனால் அங்கிருக்கும் மக்கள் முதற்காட்சியைப் பார்க்க சாரை சாராயாக பேருந்துகளிலும், வேன்களிலும் வந்திறங்கி, இயக்குநர் மாரி செல்வராஜுடன் இப்படத்தைப் பார்த்தனர்.
தங்கள் மண்ணின் சொல்லப்படாத கதையை திரையில் மனம் நெகிழ கண்ணீர் உறைந்தபடி பார்த்த மக்கள், தங்கள் மண்ணின் இயக்குநரை தோளில் தூக்கிக் கொண்டாடினர். திரையில் தங்கள் ஒவ்வொருவரின் வாழ்வையும் மாரி செல்வராஜ் பிரதிபலித்துள்ளதாக ‘வாழை’ திரைப்படம் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கின்றனர்.