1969 முதல் ஆகஸ்ட் 2024 வரை 97 முறை ஏவூர்தி ராக்கெட்களை விண்ணை நோக்கி ஏவியுள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ – ISRO). 18 இந்தியக் கல்வி நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் தயாரித்த செயற்கைக்கோள்கள் உள்பட 126 இந்திய விண்கலங்களை இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது. மேலும் 34 நாடுகளைச் சேர்ந்த 432 விண்கலங்களையும் ஏவியுள்ளது. இதுதவிர அக்னிபான் ஸ்கைரூட் நிறுவனத்தின் பிரரம்ப் திட்டத்தின் கீழ் ஏவூர்திகளை ஏவ உதவியுள்ளது.
# இயற்கை வளங்களைக் கண்டறியும் தொலையுணர்வு செயற்கைக்கோள்கள்.
# கடல் வெப்பநிலை, புயல் போன்ற வானிலை கண்காணிப்புச் செயற்கைக் கோள்கள்.
# பேரிடர் கண்காணிப்பு உள்படப் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள்.
# தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள்.
# விண்வெளி ஆய்வுக்கு நிலவு நோக்கிய சந்திரயான் விண்கலங்கள், மங்கள்யான் விண்கலம், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா, அஸ்ட்ரோசாட் விண்வெளித் தொலைநோக்கி போன்ற பல்வேறு செயற்கைக்கோள்களை வடிவமைத்துத் தயாரித்துள்ளது இஸ்ரோ.
தற்போது முனையச் செயற்கைக்கோள் ஏவூர்தி எனும் பி.எஸ்.எல்.வி (PSLV), புவி ஒத்தியங்கும் செயற்கைக்கோள் ஏவூர்தி மார்க் III எனும் எல்.வி.எம்3 (LVM3), சிறிய துணைக்கோள் ஏவுகலம் எனும் எஸ்.எஸ்.எல்.வி (SSLV), மனிதர்களை ஏந்தி விண்வெளி செல்லும் ககன்யான் ஏவூர்தி என நான்கு வகை எவூர்திகள் இஸ்ரோவிடம் உள்ளன.
முக்கிய மைல்கற்கள்: 1969 இல் இஸ்ரோ நிறுவப்பட்டது. முதலில் விண்ணில் செயற்கைக்கோள்களை ஏவும் திறன் உள்ள ஏவூர்தி தயாரிப்பில் இஸ்ரோ ஈடுபட்டது. பின்னர் நாட்டு வளர்ச்சிக்குத் தேவையான தொலைத்தொடர்பு, தொலை யுணர்வு, புவி கண்காணிப்பு வகை செயற்கைக்கோள்களை வடிவமைத்துத் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தியது.
ஏப்ரல் 19, 1975: இந்தியா தயாரித்த ஆரியபட்டா எனும் செயற்கைக்கோளை சோவியத் யூனியன் உதவியோடு விண்ணில் ஏவியது.
மே 31, 1981: இஸ்ரோவின் தயாரிப்பான SLV-3D1 ஏவூர்தி மூலம் நாமே தயாரித்த 35 கிலோ எடை கொண்ட புவி கண்காணிப்பு ரோகிணி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி வெற்றிகண்டது.
மே 20,1992: SLVயின் அடுத்தகட்ட ASLV ஏவூர்தி மூலம் காமா கதிர்களை ஆராயும் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
மே 21, 1996: PSLV-D3 ஏவூர்தி மூலம் IRS-P3 எனும் தொலையுணர்வு மற்றும் எக்ஸ் கதிர் வானவியல் ஆய்வு செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. அது முதல் ஜனவரி 2024 வரை 60 முறை ஏவப்பட்டதில் 57 வெற்றி, 2 தோல்வி, ஒன்று பகுதி வெற்றி அடைந்துள்ளது.
ஏப்ரல் 18, 2001: GSLV-D1 எனும் ஏவூர்தி மூலம் GSAT-1 எனும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. GSLV MkI, GSLV MkII எனும் இரண்டு வடிவமைப்புகளில் பிப்ரவரி 2024 வரை 16 முறை ஏவும் முயற்சியில் 10 முறை வெற்றி, 4 தோல்வி, 2 பகுதி வெற்றி அடைந்துள்ளது. இந்த ஏவூர்தி இப்போது பயன்பாட்டில் இல்லை.
அக்டோபர் 22, 2008: சந்திரயான் -1 நிலவை நோக்கி ஏவப்பட்டது. நவம்பர் 14, 2008 அன்று இதிலிருந்து குட்டிக் கலம் பிரிந்து நிலவின் தரையில் மோதியது. 312 நாள்கள் வேலை செய்த இந்த விண்கலம் நிலவில் நீர் இருப்பதை முதலில் உறுதி செய்து சாதனை படைத்தது.
நவம்பர் 5, 2013: செவ்வாய் நோக்கி ஏவப்பட்ட மங்கள்யான் எனப்படும் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் செப்டம்பர் 24, 2014 அன்று வெற்றிகரமாக செவ்வாயை அடைந்து, செயற்கைக்கோள் போலச் சுற்றத் தொடங்கியது. அக்டோபர் 2, 2022 வரை பழுதில்லாமல் செயல்பட்ட இந்த விண்கலம், செவ்வாய்க் கோளில் ஏற்படும் புழுதிப் புயல் உள்படப் பல நிகழ்வுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டது.
டிசம்பர் 18, 2014: GSLV MkIII எனும் LVM3 ஏவூர்தி ககன்யான் திட்டத்துக்குத் தேவையான சோதனை விண்கலத்தை உயரே ஏவி சாதனை படைத்தது. அதன் பின்னர் ஜூன் 05, 2017இல் GSAT-19 எனும் தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தி சாதனை படைத்தது. இது வரை மொத்தம் ஏழு முறை ஏவப்பட்ட LVM3 அனைத்தும் வெற்றி. சந்திரயான் திட்டத்தில் இந்த ஏவூர்திதான் பயன்பட்டது.
செப்டம்பர் 28, 2015: அஸ்ட்ரோசாட் எனும் விண்வெளித் தொலைநோக்கி ஏவப்பட்டது.
ஜூலை 22, 2019: சந்திரயான்-2 நிலவை நோக்கி ஏவப்பட்டது. செப்டம்பர் 6, 2019 அன்று தரையிறங்கும்போது பழுது காரணமாகத் தரையிறங்கும் கலம் மோதி அழிந்துவிட்டது.
பிப்ரவரி 10, 2023: சிறு நுண் செயற்கைக் கோள்களை ஏவும் திறன் கொண்ட SSLV-D2 எனும் ஏவூர்தி EOS-07, ஜானஸ்-1, ஆசாதிசாட்-2 ஆகிய மூன்று சிறு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வெற்றி கண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 16 அன்று ஏவப்பட்ட முயற்சியைச் சேர்த்து இதுவரை மூன்று முறை ஏவப் பட்டதில் இந்த ஏவூர்தி இரண்டு முறை வெற்றிகண்டுள்ளது.
ஜூலை 14, 2023: நிலவை நோக்கி ஏவப்பட்ட சந்திரயான்-3 ஆகஸ்ட் 23, 2023 அன்று நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. தரையிறங்கும் கலம், உலவும்கலம் இரண்டும் 14 நாள்கள் வெற்றி கரமாகச் செயல்பட்டு, நிலாவில் ஏற்படும் நடுக்கம் உள்படப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டன.
செப்டம்பர் 2 , 2023: விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா-L1 ஜனவரி 6 2024இல் L1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டுச் சூரியனை ஆய்வு செய்துவருகிறது.
எதிர்காலத் திட்டங்கள்
# ஸ்கிராம்ஜெட், ராம்ஜெட் வகை எஞ்ஜின்களைக் கொண்ட இரண்டு கட்ட விண்வெளி ஏவூர்தி எனும் நவீன வகை ஏவூர்தி தயாரிப்பு.
# எல்விஎம் 3 ராக்கெட் வடிவமைப்பை மேம்படுத்தி, பல் பயன் ஏவூர்தி (ULV) தயாரிப்பு.
# விண்வெளியில் விண்கலத்தை இயக்க அயான் எஞ்சின் தயாரிப்பு.
# நவீனச் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு மேலும் துல்லியமாக நிலவில் தரையிறங்கும் கலம் தயாரிப்பு.
(இந்தியாவின் தேசிய விண்வெளி நாள் ஆகஸ்ட் 23 அன்று கொண்டாடப்பட இருக்கிறது. 2023-ஆம் ஆண்டு சந்திரயான் – 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை நினைவுகூரும் விதத்தில் இந்த நாள் உருவானது.)