புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை அருகே உள்ள மாங்கனாம்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார். சொந்தமாக டீக்கடை ஒன்றை நடத்தி வரும் இவர், அதில் வரும் வருமானத்தின் ஒரு பகுதியில் பல உதவிகளைச் செய்துவருகிறார். அந்த வகையில், தனது டீக்கடையில் மொய் விருந்து நடத்தி, அதில் கிடைத்த பணத்தை டி.டி-யாக எடுத்து, புதுக்கோட்டை ஆட்சியர் மூலமாக வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
இதுபற்றி, அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். “சிவக்குமார் கடந்த 2012-ம் வருடம் முதல் சொந்தமாக `ஸ்ரீ பகவான் டீ ஸ்டால்’ என்ற பெயரில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் புதுக்கோட்டை டு பட்டுக்கோட்டை சாலையில் உள்ள வம்பன் நான்கு ரோடு பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். கடந்த இரண்டு வருடமாக கேப்பறை பகுதியில் நடத்தி வருகிறார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைத் தனது குடும்பத்துக்கு மட்டும் பயன்படுத்தாமல் பல்வேறு சமூக காரியங்களுக்கும் பயன்படுத்தி வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயலால் இந்தப் பகுதி பாதிக்கப்பட்டபோது, அவரது கடையில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த ரூ.28,000 கடனை தள்ளுபடி செய்து ஆச்சரியப்படுத்தினார்.
அதேபோல், வருடத்துக்கு 1,000 மரக்கன்றுகள் என்று தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் இலவச மரக்கன்றுகள் வழங்கி வந்தார். அப்படி, அவர் கொடுக்கும் மரக்கன்றுகளை ஒரு வருடத்தில் யார் சிறப்பாக வளர்க்கிறார்களோ அவர்களுக்குப் பரிசு என்றும் அறிவித்தார். அதன்படி, சிறப்பாக மரக்கன்றுகளை வளர்த்தெடுத்த 10 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குத் தலா ஒரு சில்வர் குடமும், ஹாட் பாக்ஸூம் வழங்கினார்.
அதேபோல், அவருடைய கடையில் மாற்றுத்திறனாளிகளுக்கும், குழந்தைகளுக்கும் பால் இலவசம் என்று அறிவித்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறார். அதேபோல், இலங்கையில் பொருளாதாரப் பிரச்னை ஏற்பட்டபோது, கடந்த ஆண்டு அவரது கடையில் மொய் விருந்து நடத்தி, அதில் வசூலான ரூ.16,000 தொகையைத் தமிழ்நாடு அரசிடம் வழங்கினார். கொரோனா காலகட்டத்தில் டீக்கடையில் மொய் விருந்து நடத்தி அதில் வசூலான ரூ.20,000 நிதியை அரசிடம் ஒப்படைத்தார். தவிர, தன் நண்பர்கள் பங்களிப்போடு கொரோனா ஊரடங்கின்போது அருகில் உள்ள மக்களுக்கு மளிகைப் பொருட்களை வழங்கினார்.
இவர் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்துவதால், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இவருக்கு `பசுமை சாம்பியன்’ என்ற விருதையும், ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார். மழை வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு பகுதி மக்களுக்கு உதவுவதற்காக, கடந்த வாரம் தனது டீக்கடையில் மொய் விருந்தை நடத்தினார். அதில் வசூலான தொகையை வயநாடு மக்களுக்கு உதவுவதற்காக அனுப்பி வைத்திருக்கிறார்” என்றார்கள்.
இதுபற்றி, சிவக்குமாரிடம் பேசினோம்.
“பல்வேறு விசயங்களுக்காக என் டீக்கடை மூலம் பொய் விருந்து நடத்தி மக்களுக்கு உதவியிருந்தாலும், அண்டை மாநிலமான வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவும், உயிரிழப்பும் என்னைத் தூங்கவிடாமல் செய்தன. எனவே, அந்த மக்களுக்கு என்னாலான உதவியைச் செய்ய நினைத்தேன். தனிப்பட்ட முறையில் செய்யும் அளவுக்கு எனக்குப் பொருளாதார வசதி இல்லை. அதனால், வழக்கம்போல் புதுக்கோட்டைப் பகுதியில் நடைபெறும் கலாச்சார நிகழ்வான பொய் விருந்தை நடத்தி, அதில் வசூலான தொகையைக் கொடுக்க நினைத்தேன். அப்படி, மொய் விருந்து செய்ய இருப்பதைப் பற்றி சமூகவலைத்தளங்களில் பதிவு செய்தேன். டீக்கடைக்கு டீ குடிக்க வருபவர்களிடம் இந்த தகவலைத் தெரிவித்தேன். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மொய் விருந்து நடக்கும் என்றும், மொய் விருந்து செய்பவர்களுக்கு டீயும் வடையும் கொடுத்து உபசரிக்கப்படும் என்றும் அறிவித்தேன். பலரும் ஆர்வமாக வந்து கலந்துகொண்டு, மொய் செய்தார்கள். கடைக்கு முன்பு ஓர் உண்டியல் வைத்து அதன் மூலமும், ஜிபே மூலமும் மொய் வசூல் செய்தோம்.
பலர் குடும்பத்தோடு வந்து இந்த விழாவில் கலந்துகொண்டு தங்களால் ஆன உதவியைச் செய்தனர். இன்னும் சிலர் தங்கள் குழந்தைகளை வைத்து உண்டியலில் பணத்தைப் போட வைத்தனர். இதில் என்னை நெகிழ வைக்கிற மாதிரி, இந்த முன்னெடுப்பைக் கேள்விப்பட்ட மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் சைக்கிள் வாங்குவதற்காகச் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த ரூ.5000 உண்டியல் தொகையை அப்படியே எடுத்து வந்து இந்த மொய் விருந்தில் கலந்துகொண்டு வழங்கினார். இப்படி, தொடர்ந்து ஆன்லைன் மூலமாகவும், டீக்கடையில் நடைபெற்ற மொய் விருந்து மூலமாகக் கடந்த 19-ம் தேதி வரை மொத்தமாக வசூலான ரூ. 48,200-யை டி.டி-யாக எடுத்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மூலம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். என்னோட முயற்சி தொடர்ந்து நிகழும்” என்றார் முத்தாய்ப்பாக!