Megha Akash: "என் ஆசை நிறைவேறிவிட்டது. முடிவிலா காதல்…" – காதலனைக் கரம்பிடிக்கும் மேகா ஆகாஷ்

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் நடித்து வரும் நடிகை மேகா ஆகாஷ், தனது நீண்ட நாள் காதலனைக் கரம் பிடிக்கிறார்.

தெலுங்கில் ‘லை’ என்ற படத்தின் மூலம் தன் சினிமா பயணத்தைத் தொடங்கிய மேகா ஆகாஷ், தமிழில் முதலில் கமிட்டான படம் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்த ‘ஒரு பக்கக் கதை’. இந்தப் படத்தை முடித்த கையோடு கௌதம் வாசுதேவ் மேனன் கண்ணில்பட, ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’வில் தனுஷ் ஜோடியாக நடிக்க வாய்ப்பு அமைந்தது. இந்தப் படத்தின் ‘மறுவார்த்தை பேசாதே’, ‘விசிறி’ பாடலைப் பார்த்து மறுவார்த்தை பேசாமல் மறுபடியும் தொடர்ந்து ரிப்பீட் மோடில் பார்த்தனர் தமிழ் சினிமா ரசிகர்கள்.

மேகா ஆகாஷ்

இதைத் தொடர்ந்து, கண்ணன் இயக்கத்தில் அதர்வாவுடன் ‘பூமராங்’ படத்தில் நடித்து முடித்தார். பின், ரஜினிகாந்த் நடிக்கும் ‘பேட்ட’ படத்திலும், பவன் கல்யாண் நடித்த ‘அத்தாரின்டிகி தாரேதி’ எனும் தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ்த் திரையுலகத்தின் கவனம் ஈர்த்தார். சமீபத்தில் அசோக் செல்வனுடன் ‘சபாநாயகன்’, விஜய் ஆண்டனியுடன் ‘மழைப் பிடிக்காத மனிதன்’ திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது பாலிவுட் வரை சென்று சில படங்களில் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய நீண்ட நாள் காதலனான சாய் விஷ்ணுவை அவர் திருமணம் செய்யவுள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் கேரளாவில் நேற்று (ஆகஸ்ட் 22ம் தேதி) சத்தமில்லாமல் நடைபெற்று முடிந்திருக்கிறது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

தற்போது ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை நடிகை மேகா ஆகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, “எனது ஆசை நிறைவேறிவிட்டது. முடிவிலா காதலும், மகிழ்ச்சியும் என் வாழ்வில் எப்போதும் நிறைந்திருக்கும். காதலுடன் வாழ இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டோம்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களது திருமணம் பிரமாண்ட முறையில் விரைவில் நடைபெறவுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.