சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதை வரவேற்று, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர் வெளியிட்டதித்திப்பான இந்த அறிவிப்பின் மூலம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் போல, அவரது எழுத்துகளும் தமிழ் மக்களுக்குச் சொந்தமாகின்றன. இலக்கியம், நாடகம், திரைப்பட வசனம், புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என எழுத்துத் துறையின் எல்லாக் கோணங்களிலும் கோலோச்சியவர் கருணாநிதி.
ரத்தம் தந்து உயிரைக் காப்பது போல, கருணாநிதியின் பேனா தமிழருக்கு உணர்வைத் தந்து உரிமை காத்தது. கருணாநிதியின் படைப்புகள் எல்லாம் நூல் உரிமைத்தொகை இல்லாமல் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
உலகமெங்கும் வாழும் தமிழர்கள் கருணாநிதியின் நூல்களை இன்னும் அதிகமாக வாசிக்கவும், அவரது கருத்துகள் மக்களிடையே வேகமாக பரவவும், இது மாபெரும் வாய்ப்பாகும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதேபோல கனிமொழி எம்.பி வெளியிட்ட செய்தியில், “ கருணாநிதியின் படைப்புகளை நாட்டுடைமையாக்க அனுமதியளித்த எனது தாயார் ராசாத்தி கருணாநிதிக்கும், இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதனால் கருணாநிதியின் படைப்புகள் அனைத்தும் அதிக அளவிலான மக்களிடம் சென்று சேரும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறியுள்ளார்.