இது என் தவறு தான்! தோனிக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்!

தமிழகத்தை சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பல்வேறு சர்வதேச போட்டிகளில் முக்கிய இன்னிங்ஸ் விளையாடி உள்ளார். ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த இவர் இந்த ஆண்டு ஐபிஎல்லுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாடுவதை தவிர தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராகவும் இருந்து வருகிறார். கிரிக்கெட்டின் மீதுள்ள அவரது ஆர்வத்தால் விளையாடுவதை தாண்டி இவற்றையும் செய்து வருகிறார். முழுவதுவாக கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்த தினேஷ் கார்த்திக் தற்போது SA20 லீக்கில் விளையாட உள்ளார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 

மன்னிப்பு கேட்கும் தினேஷ் கார்த்திக்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவ்வப்போது தங்களது விருப்பமான பிளேயிங் 11ஐ தேர்ந்தெடுப்பதில் ஈடுபடுவார்கள். இதில் அவர்களுக்கு பிடித்த வீரர்களையும், சிறந்த வீரர்களையும் தேர்வு செய்வார்கள். ஒரு சிலர் இதனை கூறும் போது சர்ச்சையிலும் மாட்டி கொள்வார்கள். தற்போது தினேஷ் கார்த்திக் இது போன்ற ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். கிரிக்பஸின் யூடியூப் சேனலில் இந்தியாவின் ஆல்-டைம் பிளேயின் 11 அணியை தேர்வு செய்த போது சில தவறை செய்துள்ளார். இந்தியாவிற்காக ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக விளையாடிய அனைத்து வீரர்களையும் தேர்வு செய்த கார்த்திக் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் எம்எஸ் தோனியை தேர்வு செய்யவில்லை. மேலும் தோனியின் பெயரை சேர்க்காதது தாண்டி அணியில் விக்கெட் கீப்பரை அவர் மிஸ் செய்துள்ளார்.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் சொன்ன பிளேயிங் 11 அணியில் தோனி இல்லாமல் இருந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வியை எழுப்பினர். தற்போது தான் சொன்னதில் தவறு இருப்பதாக ஒப்புக்கொண்டார் தினேஷ் கார்த்திக். “நண்பர்களே நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டேன். உண்மையாகவே அது பெரிய தவறு தான். நான் பேசிய எபிசோட் வந்த பிறகுதான் எனக்கு அது புரிந்தது. நான் தேர்வு செய்ய அணியில் விக்கெட் கீப்பரை மறந்துவிட்டேன். நான் தேர்வு செய்த அணியில் ராகுல் டிராவிட் இருந்ததால், அவரை தான் நான் விக்கெட் கீப்பராக எடுத்துள்ளேன் என்று பலரும் நினைத்துள்ளனர். ஆனால் உண்மையில் நான் ராகுல் டிராவிட்டை விக்கெட் கீப்பராக நினைக்கவில்லை. ஒரு விக்கெட் கீப்பராக இருந்து, நான் ஒரு விக்கெட் கீப்பர் இருப்பதை மறந்துவிட்டேன்! இது ஒரு தவறு” என்று தெரிவித்துள்ளார்.

Why no #MSDhoni in DK’s all-time 

Can #Bumrah lead #India?

How was #GOAT trailer?@DineshKarthik answers it all in Episode 11 of #heyCB, here pic.twitter.com/2D1hxC8FkT

— Cricbuzz (@cricbuzz) August 22, 2024

எந்த வடிவத்திலும் தோனி ஒரு சிறந்த வீரர்

“மகேந்திர சிங் தோனி எந்த காலத்திலும் இந்திய அணிக்கு கிடைத்த ஒரு சிறந்த வீரர். எந்த பார்மெட்டிலும் அவரது பெயர் நிச்சயம் இருக்கும். மீண்டும் எனது பிளேயிங் 11 அணியை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைத்தால் 7வது இடத்தில் தோனி நிச்சயம் இருப்பார். மேலும் அவரே அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராகவும் இருந்திருப்பார்” என்றும் தினேஷ் கார்த்திக் கூறினார்.

தினேஷ் கார்த்திக்கின் ஆல் டைம் பிளேயிங் 11

வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, அனில் கும்ப்ளே, ஆர் அஷ்வின், ஜாகீர் கான், ஜஸ்பிரித் பும்ரா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.