பெங்களூரு: டெல்லியை சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் தீபிகா நாராயண் பரத்வாஜ் சில தினங்களுக்கு முன்பு தனது எக்ஸ் பக்கத்தில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் காணொலி ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் விவாகரத்து பெற்ற மனைவி ஒருவர் தனது கணவரிடம் ஜீவனாம்சம் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ‘‘தனது முழங்கால் வலி சிகிச்சைக்கு ரூ.4-5 லட்சம், ஆடைகள் வாங்க ரூ.15 ஆயிரமும், வீட்டின் உணவு செலவுக்காக ரூ.60 ஆயிரமும், வெளியே சென்று சாப்பிட ரூ.20 ஆயிரமும் முன்னாள் கணவர் மாதம்தோறும் வழங்க வேண்டும்” என்று கோரினார்.
இந்த மனுவை கண்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி லலிதா.கே, பெண்ணின் வழக்கறிஞரை பார்த்து ‘‘என்ன இது இவ்வளவு பெரிய பட்டியல்? ஒரு மாதத்துக்கு ஒருவரின் செலவுக்கு ரூ.6 லட்சத்து 16,000 தேவைப்படுமா? தனியாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு செலவு இருக்குமா? அவருக்கு பணம் வேண்டும் என்றால், வேலைக்கு போய் சம்பாதிக்க சொல்லுங்கள்.
கணவரிடம் இருந்து இவ்வளவு பெரிய தொகையை எதிர்பார்க்க வேண்டாம். அடிப்படை தேவைக்கு மட்டுமே ஜீவனாம்சம் வழங்க கோர முடியும். அளவுக்கு அதிகமாக பணம் கேட்டால் மனுவை நிச்சயம் நிராகரித்து விடுவேன். உண்மையான செலவு விவரத்தை மனுதாரர் தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரருக்கு நீதிமன்ற நடைமுறை புரியாது. நீங்கள் புரிய வைக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.