திருநெல்வேலியைச் சேர்ந்த முதியவரான பெருமாள், சென்னையில் ஒரு விபத்தில் உயிரிழக்கிறார். தான்தான் அவருக்குக் கொல்லி வைக்க வேண்டும் என அவரின் இருமகன்களும் (பவன், ஆடுகளம் நரேன்) திருநெல்வேலியில் காத்திருக்கிறார்கள். மறுபுறம், தன் மனைவியைப் பிரசவத்திற்குத் தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, மருத்துவச் செலவிற்குப் பணமில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார் அமரர் ஊர்தி ஓட்டுநரான குமார் (விமல்).
இந்நிலையில், அப்பணத் தேவைக்காகப் பெருமாளின் உடலை நெல்லைக்குக் கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்று அமரர் ஊர்தியில் கிளம்புகிறார் குமார். போகும் வழியில் கூத்துக் கலைஞரான நளின மூர்த்தி (கருணாஸ்) லிஃப்ட் கேட்டு ஏறிக்கொள்ள, நெல்லையை நோக்கி பெருமாளோடு பயணம் தொடங்குகிறது. இப்பயணத்தில் குமாருக்கும் நளின மூர்த்திக்கு ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன, அவற்றைச் சமாளித்து பெருமாளின் உடலை நெல்லைக்குக் கொண்டு சென்றார்களா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜாவின் ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ திரைப்படம்.
கடும் கோபம், மனைவி மீதான பாசம், திடீர் ஆக்ஷன், பயம், ஆற்றாமை எனப் பல உணர்ச்சிகளைக் கொண்டிருக்கும் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் விமல். முக்கியமாக இறுதிக்காட்சியில் மனதைக் கனக்க வைக்கிறார் விமல். கூத்துக் கலைஞரின் உடல்மொழியையும், நெல்லையின் தேன்தமிழையும் சுமந்துகொண்டு அப்பாவி மனிதனாகப் படமெங்கிலும் உலாவும் கருணாஸ், கூத்தைக் காந்தக் குரலில் பாடும்போதும் மற்றவர்களுக்காக அழும்போதும் வேறொரு அவதாரம் எடுத்து சபாஷ் போட வைக்கிறார். படத்தின் ஆன்மாவைச் சுமக்கும் பணியில் வெற்றிபெறுகிறார் கருணாஸ். தன் ‘டெம்ப்ளேட்டான’ அழுகையும் கத்தலுமாக வந்து போகிறார் தீபா சங்கர். உருட்டவும் செய்யாமல், மிரட்டவும் செய்யாமல் ஒரு குழப்பத்திலேயே நேரத்தைக் கடத்துகிறார்கள் ஆடுகளம் நரேனும், பவனும். சார்லஸ் வினோத், குமரனின் மனைவியாக மெரி ரிக்கெட்ஸ் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.
டெமல் சேவியர், எட்வர்ட்ஸ் கூட்டணியின் ஒளிப்பதிவில் இரவு நேர நெடுஞ்சாலை காட்சிகள் பெரிய ப்ளஸ். ஆனால், திருநெல்வேலியில் நடக்கும் குடும்பக்காட்சிகளின் ஒளிப்பதிவில் நாடகத்தன்மையே அதிகம் இருப்பது பெரிய மைனஸ். பரபரப்பான இடங்களில் விறுவிறுப்பையும், உணர்வுபூர்வமான இடங்களில் நிதானத்தையும் கொண்டு வந்திருக்கிறது எம்.தியாகராஜனின் படத்தொகுப்பு. என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் பலனளிக்கவில்லை. ஆனால், பின்னணி இசையால் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஆழம் சேர்த்திருக்கிறார்.
குமார் மற்றும் நனினமூர்த்தியின் கதைகள் நேர்த்தியாகவும் எதார்த்தமாகவும் விவரிக்கப்படுகின்றன. இடைவேளை வரையிலான அவர்களின் உரையாடலில் ஆங்காங்கே நளினமூர்த்தியின் மேல் வெறுப்பு வந்தாலும், அதை இறுதிப்பகுதியில் பாசிட்டிவாக மாற்றிய விதம் அருமை. மறுபுறம், நெல்லையில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாக்கும்போது அந்த நேர்த்தியும் எதார்த்தமும் மிஸ்ஸிங்! நாடக பாணியிலான திரையாக்கமும், துணை நடிகர்களின் அதீத நடிப்பும் தொல்லையாக மாறுகின்றன. படம் முழுவதுமே இந்தப் பிரச்னை தொடர்வது பின்னடைவு. ஆக்ஷன் காட்சியின் மேம்போக்கான மேக்கிங்கும் மைனஸ்.
பதற வைக்கும் இடைவேளைக் காட்சியும், அதையொட்டி நீளும் இரண்டாம் பாதியும் பரபர எழுத்தில் வென்றிருக்கின்றன. ‘அடுத்து என்ன?’ என்ற கேள்வியை இறுதிக்காட்சி வரைக்கும் கொண்டு போகிறது திரைக்கதை. ஆணவக் கொலை, ஏஞ்சல் கதை போன்ற துணைக்கதைகளும் தேவையான மீட்டரில் மட்டும் வந்து சென்று, திரைக்கதைக்கு உதவி செய்கின்றன. நளின மூர்த்தி கதாபாத்திரத்தை இரண்டாம் பாதியில் மெருகேற்றும் இடங்கள் எமோஷனலாக மனதை அழுத்துகின்றன. சில ஓவர்டோஸான தருணங்களும் சில லாஜிக் ஓட்டைகளும் இருந்தாலும் பெரிய பாதகமாக மாறவில்லை. டெம்ப்ளேட் வில்லன் கும்பலின் டெம்ப்ளேட் மிரட்டல்களைத் தவிர்த்திருக்கலாம். கதையின் கருவையும், நளின மூர்த்தியின் கதாபாத்திரத்தையும் இறுதிக்காட்சியில் இணைத்த விதம் சபாஷ் போட வைக்கிறது. நடிப்பு, பின்னணி இசை, எழுத்து என இறுதிக்காட்சி உணர்ச்சிக்குவியலாக வெற்றிபெறுகிறது.
சுமாரான திரைமொழியும், மேம்போக்கான திரையாக்கமும் சில இடங்களில் வேகத்தடை போட்டாலும், மனித உணர்வுகளை அழகாகவும் அழுத்தமாகவும் பேசுவதால், இந்த ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ நம் மனதிற்கு மிக நெருக்கமான படைப்பாகத் தங்கிவிடுகிறது.