கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் டாக்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டு வாரமாக போராட்டம் நடத்திய டாக்டர்கள் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பிறகு இப்போதுதான் பணிக்கு திரும்பி இருக்கின்றனர். இக்கொலை வழக்கை சி.பி.ஐ.விசாரணை நடத்தி வருகிறது. பெண் டாக்டரை கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி சஞ்சய் ராய் மட்டும்தான் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான் என்று சி.பி.ஐ நடத்திய ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது சஞ்சய் ராய் சம்பவம் நடந்த அன்று மருத்துவமனைக்குள் நுழைந்த கண்காணிப்பு கேமரா பதிவு வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் சஞ்சய் ராய் அதிகாலை 1.03 மணிக்கு கழுத்தில் ப்ளூடூத் ஏர்போன் மாட்டிக்கொண்டு குடிபோதையில் மருத்துவமனைக்குள் நுழைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு கேமரா பதிவை காட்டிய பிறகுதான் சஞ்சய் ராய் குற்றத்தை ஒப்புக்கொண்டான். அதோடு அவனிடம் நடத்திய விசாரணையில் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பு நன்றாக மது அருந்திவிட்டு சோனாகஞ்ச் பாலியல் விடுதிக்கு சென்றுள்ளான். அங்கு இருந்துவிட்டு அதே குடிபோதையில் மருத்துவமனைக்கு வந்துள்ளான். அவன் செமினார் அரங்கத்திற்கு சென்ற போது பெண் டாக்டர் தனியாக உறங்கிக்கொண்டிருந்ததை பார்த்தவுடன் குடிபோதையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளான் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த கொல்கத்தா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
அதோடு ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. மேலும் 4 டாக்டர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.ஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது சஞ்சய் ராய் எந்த வித ஒரு மன வருத்தத்திலும் இல்லை என்றும், நடந்த சம்பவத்திற்காக கவலைப்பட்டதாகவே தெரியவில்லை என்று சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு அதிக அளவில் ஆபாச படங்களை பார்ப்பதில் அடிமையாக இருந்துள்ளான் என்றும் தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தில் சி.பி.ஐ மந்தமாக செயல்படுவதாக கொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். அதோடு விசாரணையை விரைவு படுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சஞ்சய் ராய் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட போது தான் அப்பாவி என்று தெரிவித்தான். அவனிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி பெறுவதற்காக அவனை சி.பி.ஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுத்தியது. கோர்ட் மற்றும் சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதலுக்கு பிறகுதான் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடியும். சஞ்சய் ராய் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டான். இதையடுத்து, `ஏன் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொள்கிறீர்கள்?’ என்று நீதிபதி குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டு இருந்த ராயிடம் கேட்டார். உடனே, `நான் எந்த வித குற்றமும் செய்யவில்லை. என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த உண்மை கண்டறியும் சோதனை அதனை நிரூபிப்பதாக இருக்கலாம்’ என்று ராய் நீதிபதியிடம் தெரிவித்தான். இவ்வழக்கில் போலீஸார் குற்றத்தை மறைக்கப்பார்ப்பதாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதோடு ஒன்றுக்கும் மேற்பட்டோர் தங்களது மகளை பாலியல் வன்கொடுமை செய்துகொலை செய்தனர் என்று குற்றம் சாட்டி இருக்கின்றனர். ஆனால் இக்குற்றச்சாட்டை தடயவியல் ஆய்வாளர்கள் நிராகரித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88