சிவகங்கை: சிவகங்கையில் 21 எருமைகள், 120 ஆடுகளை பலியிட்டு நரிக்குறவர்கள் விநோத வழிபாடு நடத்தினர்.
சிவகங்கை அருகே பழமலைநகரில் 300-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் ஆண்டுதோறும் ஆவணி மாதம் தங்களது குல தெய்வங்களான காளியம்மன், மீனாட்சியம்மன், மாரியம்மன், மதுரைவீரனுக்கு சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. இதற்காக நரிக்குறவர்கள் தங்களது குடியிருப்பு பகுதியில் சாமி கும்பிடுவதற்கான ஓலைக் குடில்களை அமைத்தனர். தொடர்ந்து அங்கு வழிபாடு நடத்தி வந்தனர். இன்று அதிகாலை சாமியாடிகள் சாமியாடினர். தொடர்ந்து, அனைவரும் நோய் நொடியின்றி வாழ, வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட காளியம்மனுக்கு 21 எருமைகள் மற்றும் 120 ஆடுகளை பலியிட்டனர்.
பின்னர் எருமை ரத்தத்தை குடித்ததோடு, உடலிலும் பூசிக்கொண்டனர். இறைச்சியை காளிக்கு படையலிட்டு, பூஜை நடத்தினர். விழாவில் திருப்பத்தூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வந்திருந்தனர்.
அவர்களுக்கு இறைச்சியை சமைத்து அசைவ விருந்தளிக்கப்பட்டது. மீதி இறைச்சியை உறவினர்களுக்கு பங்கு பிரித்துக் கொடுத்தனர். தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, மாலையில் பெண்களின் மது எடுப்பு ஊர்வலமும், நள்ளிரவில் எரிசோறு விடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அந்த மக்கள், “எங்கள் குலத்தை காக்க காளி, அசுரனை வதம் செய்தார். அப்போது தரையில் விழுந்த அசுரனின் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் மீண்டும் அசுரனாக உருவெடுத்தது. இதனால் காளி அசுரனின் ரத்தம் தரையில் விழாமல் குடித்தார். அதேபோல் நாங்கள் எருமையை அசுரனாக நினைத்து பலியிட்டு, ரத்தத்தை தரையில் வடியாமல் பிடித்துக் குடிக்கிறோம்” என்றனர்.