திஸ்பூர்: வங்கதேச இந்துக்கள் ஒருவர்கூட இந்தியாவுக்குள் நுழைய முயலவில்லை என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, “ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து, அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து இந்துக்கள் ஒருவர்கூட இந்தியாவுக்குள் நுழைய முயற்சிக்கவில்லை. வங்கதேச இந்துக்கள் தங்கள் நாட்டிலேயே இருந்து கொண்டு, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஒரு மாதத்தில், இந்தியாவுக்குள் ஒரு இந்து கூட நுழைய முயன்றதாக கண்டுபிடிக்கப்படவில்லை.
அதேநேரத்தில், கடந்த ஒரு மாதத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த 35 முஸ்லிம் ஊடுருவல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து உள்ளே நுழைய முயல்கிறார்கள். அசாமில் இருப்பதற்காக அவர்கள் முயலவில்லை. மாறாக, பெங்களூரு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களுக்குச் சென்று ஜவுளித் தொழிலில் வேலை செய்ய திட்டமிடுகின்றனர். வங்கதேசத்தில் உள்ள இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு நாங்கள் எங்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து அந்த நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, கடந்த 5ம் தேதி நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சடைந்தார். ஷேக் ஹசீனா பதவி விலகியதை அடுத்து, வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது முஸ்லிம்கள் தாக்குதல்களை நடத்தினர். நாட்டின் 64 மாவட்டங்களில் குறைந்தது 52 மாவட்டங்கள் மதவெறி வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்டதாக வங்கதேசத்தின் இந்து புத்த கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் தெரிவித்தது.
புதிய இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரும் நோபல் பரிசு பெற்றவருமான முகமது யூனுசுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, “இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நாட்டில் இயல்பு நிலை விரைவில் திரும்பும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய முகமது யூனுஸ், இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கு டாக்கா முன்னுரிமை அளிக்கும் என உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.