திருவண்ணாமலை: “சமூக நீதிக்காக போராடிய தந்தை பெரியாரின் படைப்புகளை தமிழக அரசு ஏன் அரசுடமையாக்கவில்லை?” என்று பாமக வழக்கறிஞரும், சமூக நீதிப் பேரவையின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு கேள்வி எழுப்பி உள்ளார்.
கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி பாமக நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி திருவண்ணாமலையில் இன்று (ஆக.24) நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஏந்தல் பக்தசச்சலம் தலைமை வகித்தார். நகர செயலாளர்கள் தமிழ்மணி, செல்வராஜ், நகரத் தலைவர்கள் அசோக்குமார், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் ஏழுமலை வரவேற்றார். சமூக நீதிப் பேரவை மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், “கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு கலைக் கல்லூரியை தமிழக அரசு தொடங்க வேண்டும், மூடப்பட்ட அருணாசல சர்க்கரை ஆலையிடம் இருந்து கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை மாவட்ட நிர்வாகம் பெற்று தர வேண்டும், நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், சாலைகளை சீரமைக்க வேண்டும், நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் வழக்கறிஞர் கே.பாலு கூறும்போது, “திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். இவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. திருப்பதி முழுவதுமே தூய்மையாக இருக்கும். திரும்புகின்ற இடமெல்லாம் குடிநீர் கிடைக்கும். பெண்களுக்கு பிரத்யேகமாக கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ஆனால், திருவண்ணாமலையில் பெண் பக்தர்களுக்கு உரிய கழிப்பறை வசதி செய்து தரப்படவில்லை. உணவு கூடங்கள் தூய்மையாக இல்லை.
போக்குவரத்து இன்னல்களை உள்ளூர் மக்கள் அனுபவதித்து கொண்டுள்ளனர். இடையூறு இல்லாமல் அன்றாட வாழ்க்கையை உள்ளூர் மக்கள் மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும். தங்கும் விடுதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். உணவு கூடங்களை ஏற்படுத்தி கொடுக்க தமிழக அரசும், அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு இரட்டை வேடம்: இடஒதுக்கீட்டை அமல்படுத்தப்படாமல் மத்திய அரசு பணியில் நேரடி நியமனத்தால் சமூக நீதி மறுக்கப்படுகிறது என முதல்வர், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் சமூகநீதி சார்ந்த இயக்கங்கள் தெரிவித்திருந்தன. இதையடுத்து மத்திய அரசு தனது உத்தரவை திரும்ப பெற்றது என்பது வரவேற்கத்தக்கது. மத்திய அரசை குற்றஞ்சாட்டும் தமிழக அரசு, கடந்த 3 ஆண்டுகளில் நேரடி நியமனம் என்ற அடிப்படையில், நியமனம் செய்யப்பட்ட பதவிகளின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
ரூ.3 லட்சத்துக்கும் அதிகமாக ஊதியம் கொடுக்கும் ஐஏஎஸ் அதிகாரி நிலையில் உள்ள பதவிகள் எல்லாம் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறது. அரசின் ஆலோசகர் என்ற பெயரில் நேரடி நியமனம் செய்யப்படுகிறது. இந்த பதவிகளுக்கு அரசுக்கு, அமைச்சர்களுக்கு வேண்டியவர் என்ற அடிப்படையில் மட்டுமே தேர்வு நடைபெறுகிறது. 69 சதவீத இடஒதுக்கீட்டை அடிப்படையாக கொண்டு அனைத்து பிரிவினருக்கும் நியமனம் செய்யப்பட வேண்டும்.
மத்திய அரசுக்கு ஒரு நிலைபாடு, மாநில அரசுக்கு ஒரு நிலைபாடு என்ற அடிப்படையில்தான் தமிழகத்தில் சமூக நீதி உள்ளன. எல்லா நிலைகளிலும் சமூக நீதியை அமல்படுத்துகிறோம் என்று சொல்லக்கூடிய திராணியும், தெம்பும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறோம். சமூக நீதியில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது.
இடையூறாக இருப்பவர்கள் யார்? – முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படைப்புகள் அரசுடமையாக்கபட்டதை வரவேற்கிறோம். கருணாநிதியை விட மிக அதிகமாக சமூக நீதி கருத்துகளை தந்தை பெரியாரின் படைப்புகளை, அவரது கொள்கைகளை தாங்கி நடத்துவதாகவும், அவர் வழி வந்ததாக கூறிக்கொள்ளும் தமிழக அரசு, ஏன் அரசுடமையாக்கவில்லை. இதில் உள்ள பிரச்சினை என்ன? இதற்கு இடையூறாக இருக்கக்கூடியவர்கள் யார்? தந்தை பெரியாரின் படைப்புகள், சம கால இளைஞர்களை சென்றடைய வேண்டும். இதற்கு திராவிட கழகத் தலைவர் வீரமணியாக இருந்தாலும், மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும். இதுதான் தமிழக அரசுக்கு நாம் எழுப்பின்ற வேண்டுகோளாகும்.
சொத்துக்கு வாரிசாக செயல்படுகிறார்: சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது. ஆனால் மத்திய அரசை காரணம் காட்டுகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும், மாநில அரசு நடத்த வேண்டும் என்று தேர்தலில் தோற்றவர்கள் கூறுகிறார்கள் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின் கருத்துகள், கொள்கைகளுக்கு வாரிசாக செயல்படாமல், அவரின் சொத்துக்கு வாரிசாக செயல்படுகிறார்.
இடஒதுக்கீட்டை செயல்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய அரசும், உள் இடஒதுக்கீட்டை செயல்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் சொல்கிறது. 69 சதவீத இடஒதுக்கீடு தமிழகத்தில் அமலில் உள்ளது. அதிமுக ஆட்சியில் 69 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த கடந்த 2022-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் பழனிசாமி நியமித்த நீதிபதி குணசேகரன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், ஆட்சி மாற்றத்துக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் காலாவதியாகிவிட்டது.
பிஹார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளன. இக்கணக்கெடுப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை பாட்னா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவித்தது. இதையெல்லாம் மறைத்துவிட்டு, சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என சொல்கிறார்கள். தந்தை பெரியார் நேர்மையானவர், மனதில் பட்டதை சொல்பவர். இதற்கு நேர்மாறாக செயல்படுபவர் வீரமணி” என்று பாலு கூறினார்.
மாநில சிறுபான்மை பிரிவுத் தலைவர் ஷேக்முகைதீன், பசுமை தாயகம் நிர்வாகி பொன்மலை உட்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்டத் துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.