நக்சலைட்டுகள் விவகாரம்: அமித்ஷா தலைமையில் 7 மாநில உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்டுகளின் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்நிலையில், சமீபத்திய மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசும்போது, 3-வது முறையாக பிரதமர் மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், சத்தீஷ்காரில் 3 ஆண்டுகளில் நக்சலைட்டுகள் ஒழிக்கப்படுவார்கள் என பேசினார்.

இந்த நிலையில், சத்தீஷ்காரின் தலைநகர் ராய்ப்பூரில் நக்சலைட்டுகள் பாதிப்புள்ள மாநிலங்களில் நிலைமையை ஆய்வு செய்வதற்காக மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் இன்று தொடங்கியது.

இதில், சத்தீஷ்கார் முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய் மற்றும் துணை முதல்-மந்திரி விஜய் சர்மா, மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த ராய், தலைமை செயலாளர்கள் மற்றும் சத்தீஷ்கார், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் மராட்டிய மாநிலங்களின் டி.ஜி.பி.க்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த 7 மாநிலங்களிலும் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனை தொடர்ந்து, இன்று மாலை 6 மணியளவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மத்திய மந்திரி அமித்ஷா பேச இருக்கிறார்.

சத்தீஷ்காரில் கடந்த ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் நக்சலைட்டு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. நடப்பு ஆண்டில் இதுவரை 142 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.