வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் உள்ள சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரியில் பூமிக்கு திரும்புவார் என நாசா அறிவித்துள்ளது. சனிக்கிழமை அன்று இந்த தகவலை நாசா தெரிவித்தது.
பத்திரிகையாளர் சந்திப்பில் நாசாவின் அட்மினிஸ்ட்ரேட்டர் பில் நெல்சன் தெரிவித்தது. “விண்வெளிப் பயணம் மிகவும் ஆபத்தானது. அது பாதுகாப்பான விண்கலனாக இருந்தாலும் ஆபத்து என்பது உள்ளது. அதுவும் சோதனை அடிப்படையிலான பயணம் பாதுகாப்பானது அல்ல. அதனால் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்க வைப்பது என முடிவு செய்துள்ளோம்.
போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலனை யாருமின்றி (Uncrewed) பூமிக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளோம். அதுதான் பாதுகாப்பான வழியாக இருக்கும். இந்த பணியில் ஈடுபட்டுள்ள நாசா மற்றும் போயிங் நிறுவனத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்தார். வரும் பிப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலனில் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூன் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இருவரும் ஸ்டார்லைனரில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை ஜூன் 6-ம் தேதி அடைந்தனர். அப்போது முதல் அவர்கள் இருவரும் அங்கேயே உள்ளனர். அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு இதற்கு காரணமாக அமைந்தது. விண்வெளி மையத்தில் சுமார் 80 நாட்களாக உள்ள அவர்களை பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் அடுத்த ஆண்டுதான் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.