மும்பை: நேபாளத்தில் பேருந்து விபத்தில்உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணநிதி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை, நேபாளம் போக்ஹாரா பகுதியில் இருந்து காத்மாண்டுவிற்கு சென்று கொண்டிருந்த 43 பேர் கொண்ட பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 24 பேர் இந்தியர்கள். குறிப்பாக மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். விபத்து குறித்து கேள்விப்பட்டதும் நேபாள அதிகாரிகள் மீட்புப்பணியை மேற்கொண்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டுவர மகாராஷ்டிரா அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அரசு மூத்த அதிகாரிகளிடம் பேசினார்.
முதல்வரின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் ஒன்றை ஏற்பாடு செய்தது. இந்த சிறப்பு விமானம் மூலம் உயிரிழந்த 24 பேரின் உடல்கள் நாசிக் நகரத்துக்குக் கொண்டுவரப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விவகாரங்களை ஒருங்கிணைக்க மத்திய அரசு சிறப்பு அதிகாரி ஒருவரை நியமித்தது.
முன்னதாக, இந்த விபத்து குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எழுதிய ‘எக்ஸ்’ பதிவு: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் மாவட்டத்தில் இருந்துநேபாளம் நாட்டுக்கு புனிதப்பயணம் சென்ற பக்தர்கள் பயணித்தபேருந்து கவிழ்ந்து நிகழ்ந்த கோர விபத்து மிகுந்த வேதனைஅளிக்கிறது. இந்த பயணத்தில் துரதிருஷ்டவசமாகப் பக்தர்கள்சிலர் உயிரிழந்தனர், மற்றவர்களுக்குப் படுகாயம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் இறந்தவர்களின் உடல்களைக் கொண்டு வர நேபாளம் மற்றும் உத்தரப்பிரதேச அரசுடன் மகாராஷ்டிரா அரசு ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இந்த நெருக்கடியான சூழலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பக்கம் மாநில அரசு ஆறுதலாகவும் உறுதுணையாகவும் நிற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.