பழநி: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வெளிநாட்டினர் உட்பட பல்லாயிரம் பேர் திரண்டனர்.
இம்மாநாட்டில் கலந்து கொண்ட நீதிபதி வி.சிவஞானம் பேசுகையில், ‘அவன் இன்றி நாம் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்த்துவதன் பயன்தான் இந்த முருகன் மாநாடு. இறைவனை எப்படி எல்லாம் பாடுவோம் என்று நம்முடைய முன்னோர்களும், அறிஞர்களும் பாடிக்காட்டி இருக்கிறார்கள்’ என்றார்.
நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் பேசுகையில், ‘தமிழ் அறிஞர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் அனைவரையும் ஒன்றிணைத்து இந்த மாநாட்டை நடத்துவது தமிழக அரசுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது’ என்றார்.
நீதிபதி பி.புகழேந்தி பேசுகையில், ‘தமிழ் மருத்துவத்தில் சித்த மருத்து வம் சிறப்பு வாய்ந்தது. தமிழ் மருத்துவத்துக்கு பழநியில் ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும். இது தமிழ் கடவுள் முருகனுக்கு நாம் அளிக்கும் காணிக்கையாக இருக்கும்’ என்றார்.
நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் உள்ளிட்டோர் முருகனின் பெருமைகளை பேசினர்.
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஆறுமுகம் செந்தில்நாதன், ஆஸ்திரேலியாவை சேர்ந்த மருத்துவர் சந்திரிகா ஆகியோர் பேசினர். மாநாட்டில் ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டையொட்டி அமைக்கப் பட்ட பிரம்மாண்ட அரங்கம் பார்வை யாளர்களை வெகுவாக கவர்ந்தது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வமாக செல்ஃபி எடுத்தனர். 100 அடி உயரத்தில் காற்றில் அசைந்தாடிய மாநாட்டுக் கொடி, மலை போல் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கண்காட்சி அரங்கம் பக்தர்களை ஆச்சரியப்படுத்தியது.
3-டி திரையரங்கில் பா.விஜய் இயக்கிய முருகப் பெருமானின் பெருமைகளை கூறும் பாடல் மற்றும் விஆர் (விர்ச்சுவல் ரியாலிட்டி) மூலம் அறுபடை வீடுகளை பக்தர்கள் பார்வையிட்டனர். பேருந்து நிலையம், வாகன நிறுத்துமிடங்களில் இருந்து மாற்று திறனாளிகள், முதியவர்களை பேட்டரி கார்கள் மூலம் விழா அரங்கம், உணவு கூடத்துக்கு அழைத்து சென்றனர்.
மாநாட்டு வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சித்த மருத்துவம் உட்பட 20 மருத்துவ முகாம்கள் அமைத்து பக்தர்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. அவசர உதவிக்கு 20 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தன. மாநாடு நடைபெறும் பழனியாண் டவர் கல்லூரி வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சுத்திகரிக் கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட மொபைல் டாய் லெட் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
மாநாட்டை முன்னிட்டு பழனியாண்டவர் கல்லூரி வளாகம், பழநி மலைக்கோயில் மற்றும் இடும்பன் கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் 2,000 போலீஸார் ஈடுபட்டனர். மாநாட்டில் இலவச காலணி பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டிருந்தது.
மாநாட்டுக்கு வந்திருந்த பங்கேற்பாளர்கள், வெளிநாட்டினர் மற்றும் பக்தர்களுக்கு 3 வேளையும் விதவிதமான உணவுகள் வழங்கப்பட்டன. இதற்காக 10 உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நூற்றுக்கணக்கான சமையல்காரர்கள் சுடச்சுட உணவை தயாரித்து வழங்கினர். பக்தர்கள், பொதுமக்கள் கண்டு ரசிப்பதற்காக மாநாட்டு கண்காட்சி ஒருவார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டையொட்டி அறநிலையத் துறை அதிகாரிகள், பணியாளர்கள் ஒரே மாதிரியான ஆடை அணிந்து வந்திருந்தனர். அதற்காக, பெண் பணியாளர்கள் 400 பேருக்கு 2 செட் புடவை, ஆண் பணியாளர்கள் 450 பேருக்கு 2 செட் வேட்டி, சட்டை வழங்கப்பட்டிருந்தது.
மாநாடு விழா அரங்கம், கல்லூரி வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் உடனுக்குடன் குப்பை அகற்றப்பட்டது. சனி, ஞாயிறு விடுமுறை, திங்கள் கிழமை கிருஷ்ண ஜெயந்தி என 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் நேற்று காலை முதலே கண்காட்சியை பார்க்க பொதுமக்கள் குவிந்தனர். அதனால் அரங்கம் முழுவதும் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது.