இந்த வார டாப் சினிமா தகவல்களைப் பார்க்கலாம்.
விஜய் சேதுபதியுடன் இணையும் நித்யா மேனன்!
‘மகாராஜா’ திரைப்படம் விஜய் சேதுபதிக்குப் பிரமாண்ட வெற்றியைக் கொடுத்திருக்கிறது. இவர் அடுத்ததாக இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். 70வது தேசிய விருதுகளில் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்திற்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் இவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி, கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்திலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும், வினய்யுடன் ‘டியர் எக்ஸஸ்’ படத்திலும் நடித்துவருகிறார்.
தங்கலானும் 6 மணி நேரமும்!
தங்கலானுக்கு மாய யதார்த்தவாதம் என்ற யுக்தியைக் கையாண்டு கதை சொல்லியிருந்தார் இயக்குநர் பா.இரஞ்சித். இப்படியான யுக்தி பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தையும் கொடுத்திருக்கிறது. இப்படத்தின் முழுநீளம் பற்றியெல்லாம் பல தகவல்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பேசப்பட்டு வந்தது. தற்போது இது தொடர்பாக விகடனுக்குப் பேட்டியளித்த பா.இரஞ்சித்தின் உதவி இயக்குநர்கள், “இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் எடிட் டேபிளுக்கு 6 மணி நேர ஃபுட்டேஜ்கள் வந்தன. அதனை மூன்று மணி நேரத்துக்குச் சுருக்கி அதன் பின்னர் 2 மணி நேரம் 30 நிமிடத்திற்கு எடிட்டை முடித்தோம். நேரத்திற்காகக் கத்தரித்ததில் சில முக்கிய காட்சிகளும் இருக்கின்றன. அது கூடிய விரைவில் டெலீடட் சீன்களாக வரும்!” என்கிறார்கள்.
நெட்ஃபிளிக்ஸில் டாப் இடத்தை வகிக்கும் ‘மகாராஜா’:
நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த ‘மகாராஜா’ திரைப்படம் ஜூலை 14-ம் தேதி வெளியாகி அதிரடியான வரவேற்பைப் பெற்றது. இப்போதுவரை பல பிரபல நடிகர்களும் இயக்குநர்களும் இப்படத்தை ஓ.டி.டியில் பார்த்துப் பாராட்டி வருகிறார்கள். இந்தாண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட இந்தியத் திரைப்படம் என்கிற பெருமையையும் இந்தப் படம் சொந்தமாக்கியிருக்கிறது. இந்தத் தகவலை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருக்கிறது.
கிட்டத்தட்ட 18 மில்லியன் பார்வையாளர்கள் இப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மட்டும் பார்த்திருக்கின்றனர். இதற்கு அடுத்த இடத்தில் கிரண் ராவ் இயக்கத்தில் வெளியாகியிருந்த ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம் இருக்கிறது.
‘கோட்’டுக்கு யு/ஏ!
விஜய் நடித்திருக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழைத் தணிக்கைக் குழு வழங்கியிருக்கிறது. இப்படத்தின் முழுக் கால அளவு 2 மணி நேரம் 59 நிமிடம் என்பதையும் அறிவித்திருக்கிறார்கள். விஜய்யின் ‘பிகில்’ திரைப்படமும் இதே போல 2 மணி நேரம் 59 ஓடியது. மேலும் ‘மாஸ்டர்’ திரைப்படமும் 2 மணி நேரம் 58 நிமிடம் கால அளவைக் கொண்டதுதான்.
அடுத்ததாக தனுஷுடன்!
மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் ‘வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. தனது வாழ்க்கையில் நிகழ்ந்த துயரமிகு சம்பவத்தை மையப்படுத்தி காலத்தில் என்றும் நிலைத்து நிற்கும் படைப்பாகக் கொடுத்திருக்கிறார். இவர் தற்போது துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ படத்தை இயக்கி வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது இத்திரைப்படம். இதற்கு அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். இதை மாரி செல்வராஜும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.