`மனிதனின் பேராசை… இயற்கை எதிர்வினையாற்றும்!' – வயநாடு நிலச்சரிவு குறித்து கேரள உயர் நீதிமன்றம்

நாட்டையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவு பேரிடர் ஏற்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதத்தை நெருங்க இருக்கிறது. 400-க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கிய இந்த நிலச்சரிவில் மாயமான நூற்றுக்கும் மேற்பட்டவர்களை இன்றளவும் கண்டறிய முடியவில்லை. உறவுகளையும் உடமைகளையும் இழந்து, உயிர் தப்பித்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சியில் கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது.

வயநாடு நிலச்சரிவு

வார்த்தைகளால் விவரிக்க முடியாத இந்த நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு மாதத்தை நெருங்கினாலும், அதன் கோர தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இயற்கை வளங்களை அழித்து வளர்ச்சிப்‌ பணிகளை மேற்கொள்வதாக பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் இதுவரை கண்டிராத பேரிடரான வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது கருத்து தெரிவித்த ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் ஷியாம் குமார் நீதிபதிகள் அமர்வு, “மனிதர்களின் அலட்சியம் மற்றும் பேராசைக்கு எதிராக இயற்கை எதிர்வினையாற்றும் என்பதற்கான முக்கிய உதாரணம்தான் இந்த நிலச்சரிவு சம்பவம். இதற்கான அறிகுறிகளை நீண்ட காலமாகவே இயற்கை நமக்கு வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

ஆனால், மாநிலத்தை பொருளாதார வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறோம் என்ற பெயரில் அவற்றை புறக்கணித்து விட்டோம்.

கேரள உயர் நீதிமன்றம்

2018 , 2019 – ம் ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்கள், கோவிட் பெருந்தொற்று, நிலச்சரிவு ஆகியன நாம் செல்லும் பாதையில் உள்ள தவறுகளை நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. நமது வழிகளில் உள்ள தவறுகளை சரி செய்து, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசு அதன் வளர்ச்சிக் கொள்கையை மறுபார்வை செய்ய வேண்டும். இயற்கை வளங்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பேரிடர் தடுப்பு, நிலையான வளர்ச்சி இலக்குகள் சார்ந்து மாநில அரசு கொண்டுள்ள கொள்கைகளில் புதிய அணுகுமுறை தேவை. இது போன்ற இயற்கைப் பேரிடர் ஏற்படுவதைத் தடுக்க விரிவான கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.