“விரலில் வலி" சிகிச்சைக்கு சென்ற சிறுவன்… காலையே இழந்த சோகம்..! மருத்துவமனையில் நடந்தது என்ன?

கால் விரலில் வலி என்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சிறுவன் காலையே இழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் எஸ். சின்னையா. இவருக்கு 11 வயதில் மகன் இருக்கிறார். இவரின் கால் விரலில் வலி என்று தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அழைத்துச் சென்றிருக்கிறார். அதன்பிறகு ஏற்பட்ட சம்பவங்களை சின்னையாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டோம்.

பாதிக்கப்பட்ட சிறுவன்

“கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி என் மகனின் இடது கால் விரலில் வலி ஏற்பட்டதால் ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் கிளினிக்குக்கு அழைத்துச் சென்றோம். பரிசோதித்த மருத்தவர் இது நரம்பு தொடர்பான பிரச்னையாக இருக்கலாம் என்பதால், அது தொடர்பான சிறப்பு மருத்துவரிடம் செல்லப் பரிந்துரைத்தார்.

அதற்குப் பின் வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மகனை அழைத்துச் சென்றோம். அங்கு நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் சரவணன் பாலச்சந்தர் என்பவர் ஆதம்பாக்கத்தில் உள்ள தனது சொந்த மருத்துவமனையான ‘மவுன்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை’க்கு சிகிச்சைக்கு அழைத்து வரும்படி தெரிவித்தார்.

சிறுவனின் தந்தை சின்னையா

இதனையடுத்து ஏப்ரல் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அந்த மருத்துவமனைக்கு என் மகனை அழைத்துச் சென்றோம். என் மகனைப் பரிசோதித்த மருத்தவர் சரவணன், காலில் ஒரு ரத்தக்குழாயில் அடைப்பு உள்ளதாகவும், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலம் இதனை சரி செய்துவிடலாம் என்றும் கூறி, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்துள்ளார்.  சிகிச்சைக்குப் பிறகு என் மகனின் கால் கறுப்பாக மாறியது. மருத்துவரிடம் கேட்டபோது, காலில் வேறொரு பிரச்னை இருக்கிறது, மற்றோர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்.

அடுத்து அந்த அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அதற்குப் பிறகு என் மகனின் கால் மூட்டுக்கு கீழ் கட்டி ஒன்று உருவானது. அந்தக் கட்டியை நீக்க மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அடுத்த ஓரிரு தினங்களில் என் மகனின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், உயிரைக் காப்பாற்ற காலை அகற்றியாக வேண்டும் என மருத்துவர் சரவணன் எங்களிடம் தெரிவித்தார். பதறிப்போன நானும், என் மனைவியும் சிகிச்சைக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டோம். இதனையடுத்து, என் மகனின் இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மூட்டிலிருந்து பாதம் வரை அகற்றப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுவன்

முழுவதும் குணப்படுத்திவிடுவோம் என ஆசைகாட்டி ஒவ்வொரு முறையும் கையெழுத்து வாங்கிக்கொண்டனர். கால் விரலில் வலி என போனதற்கு மொத்தம் நான்கு அறுவை சிகிச்சைகள் செய்துள்ளனர். காலை எடுக்கும் முன்பு தனி அறையில் எங்களை உட்கார வைத்து, பொறுமையாகப் பேசினார். சிகிச்சை முடிந்த பிறகு நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் சரியாக வரவில்லை. ஆஞ்சியோ சிகிச்சையின்போதே ஏதோ தவறு நடந்திருக்கிறது. மருத்துவர் அதனை மறைக்கிறார் என்று தோன்றுகிறது.

பிரச்னை பெரிதாக ஆகிவிடக்கூடாது என்பதால் கால் அறுவை சிகிச்சைக்கான செலவை மருத்துவமனையே ஏற்பதாகவும், மருந்துகளுக்கு உண்டான பணத்தை மட்டும் பொறுமையாக செலுத்துமாறும் எங்களிடம் மருத்துவர் சரவணண் தெரிவித்தார். மகனின் இந்த நிலைமையால் மன உளைச்சலுக்கு ஆளாகி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடிவெடுத்தோம்.

மருத்துவர் சரவணன் பாலச்சந்தர்

இந்நிலையில் மருத்துவர் சரவணண் என்னைத் தொடர்புகொண்டு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு தருவதாகத் தெரிவித்தார். அதை வேண்டாம் என்று மறுக்கவே, மீண்டும் ஒரு லட்சம் தருகிறேன் என்றும் தெரிவித்தார். நாங்கள் அதை வாங்க மறுத்துவிட்டோம்.

அவர் நஷ்டஈடு தருவதாகத் தெரிவித்துவிட்டு, ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் நானும் என்னுடைய உறவினரும் பணம் கேட்டு மிரட்டுவதாக மருத்துவர் புகாரளித்தார். இதனையடுத்து நாங்களும் எங்கள் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம். மேலும், சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை தலைமை அலுவலகத்திலும், சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்களிடமும் நேரிலும் மனு கொடுத்தோம். அரசு செலவில் சிறுவனுக்கு செயற்கை கால் பொருத்த ஏற்பாடு செய்வதாக அமைச்சரும் தெரிவித்திருக்கிறார்” என்றார்.

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மருத்துவர் ஜெ ராஜமூர்த்தி

இந்நிலையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அதிகாரிகள் ஆதம்பாக்கத்தில் உள்ள மவுன்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர். அப்போது போதிய மருத்துவ வசதிகள் இல்லையென்றும், வருகைப் பதிவுகள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக  மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மருத்துவர் ஜெ ராஜமூர்த்தியிடம் பேசினோம். “அந்த மருத்துவமனையை ஆய்வுசெய்து தற்காலிகமாக அதன் உரிமத்தை ரத்து செய்துள்ளோம்.

எங்கள் இயக்கத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு 7 நாள்களுக்குள் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாங்கள் துறை ரீதியான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் நஷ்டஈடு பெற வேண்டும் என்றால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாட வேண்டும்” என்று தெரிவித்தார்.

medical

இதுபற்றி விளக்கம் கேட்க மருத்துவமனைக்கு இரண்டு முறை நேரில் சென்றோம். யாரும் உரிய பதில் அளிக்கவில்லை. அங்கிருந்த ஊழியர்கள் மருத்துவரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. மருத்துவரை போனில் தொடர்புகொண்டபோது பிறகு பேசுவதாகக் கூறி அழைப்பைத் துண்டித்தார். மீண்டும் தொடர்புகொண்டபோது அழைப்பை ஏற்கவில்லை. மருத்துவர் தரப்பில் விளக்கம் கொடுக்கும்பட்சத்தில் அதையும் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.