இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது பெண்கள் பின்னால் அமர்ந்திருந்தாலும், சில நேரங்களில் அவர்களின் துப்பட்டா வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி, கீழே விழுந்து உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது. அது போன்ற எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கிறது. மும்பையைச் சேர்ந்த சுனிதா மனோகர் என்ற பெண் எப்போதும் இரு சக்கர வாகனத்தை ஓட்டுவது வழக்கம். அவர் வழக்கம்போல் இரு சக்கர வாகனத்தை ஓட்டியபோது முகத்தில் எதாவது பூச்சி தாக்குதல் இருக்கக் கூடாது என்பதற்காக முகத்தை துணியால் மூடிக்கொண்டு ஹெல்மெட் அணிந்தபடி சென்றிருக்கிறார். அவர் வேகமாக வாகனத்தை ஓட்டியபோது காற்றும் வேகமாக வீசியது. இதனால் சுனிதாவின் துப்பட்டா இரு சக்கர வாகத்தின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டு, சுனிதாவை பின்னோக்கி இழுக்க ஆரம்பித்தது. துப்பட்டா பின்னோக்கி இழுப்பதை உணர்ந்த சுனிதா, உடனே சுதாரித்துக்கொண்டு பிரேக் போட்டார்.
நிலைமை மோசமாவதற்குள் அந்த வழியாக வந்த மற்றொரு பைக்கில் பின் புறம் இருந்து இருந்த நபர், ஓடி வந்து சுனிதாவிற்கு உதவினார். அதோடு அந்த வழியாக வந்த மற்றவர்களும் சுனிதாவின் துப்பட்டாவை சக்கரத்தில் இருந்து எடுத்து அவரைக் காப்பாற்றினர். இது குறித்து சுனிதா தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் அமைதியாக பைக் ஓட்டிச் சென்றேன். அந்நேரம் எனது துப்பட்டா வாகனத்தின் செயினில் சிக்கிக்கொண்டது. இதனால் எனது கழுத்தில் காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக கருணையுள்ளம் கொண்டவர்கள் என்னை காப்பாற்றினர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, “இரு சக்கர வாகனம் ஓட்டும்போது துப்பட்டா அணிவதை தவிருங்கள். நீங்கள் வாகனம் ஓட்டினாலும், பின்னால் இருந்தாலும் துப்பட்டாவை தவிருங்கள். பாதுகாப்புடன் இருங்கள். நான் இம்முறை அதிர்ஷ்டசாலி!” என்றும் அப்பெண் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அப்பெண் வெளியிட்ட வீடியோவை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ஒரு நெட்டிசன் வெளியிட்டுள்ள பதிவில், “இரு சக்கர வாகனம் ஓட்ட நன்கு பயிற்சி பெற்றவர் என்பதால், சரியான நேரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “இந்த வீடியோவை யார் எடுத்தது?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.