‘ஒருநாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப்போகாது’, ‘நெஞ்சோடு கலந்திடு’, ‘நினைத்து நினைத்துப் பார்த்தேன்’, ‘ஏதோவொன்று என்னை தாக்க..’, ‘நிழலினை நிஜமும்’, ‘தெய்வங்கள் எல்லாம்..’ ஜல்சா பண்ணுங்கடா…’ என வாழ்க்கை, காதல், தாய் – தந்தை அன்பு, நட்பு, கொண்டாட்டம், சோகம், புத்துயிர்ப்பாக ஒவ்வொருவரின் ப்ளேலிஸ்ட்டிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் யுவன் சங்கர் ராஜா.
பின்னணி இசை என்றால் சொல்லவே தேவையில்லை. ‘மன்மதன்’, ‘காதல் கொண்டேன்’, ‘பில்லா’, ‘மங்காத்தா’ என பல வரிசைக் கட்டி நிற்கின்றன. ஆனால், சமீபத்தில் யுவன், முன்பைப் போல அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைப்பதில்லை. அதனால், ஒருசிலர் யுவன் இனி திரும்ப மார்க்கெட்டைப் பிடிப்பது கடினம், அவரது இசை முன்பைப்போலயில்லை என்றெல்லாம் சமூக வலைதளங்களில் விமர்ச்சித்து வருகின்றார்கள். குறிப்பாக, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘G.O.A.T’ படத்தில் ‘விசில் போடு’, ‘ஸ்பார்க்’ பாடல்களுக்கு கலவையான விமர்னசனங்கள் வந்திருந்திருந்தன.
இதையடுத்து வந்த ‘G.O.A.T’ டிரெயிலரில் யுவனின் பின்னணி இசை பிரமாதமாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டிக் கொண்டாடினர். இப்படியான விமர்சனங்களும், பாராட்டுகளும் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு ஒன்றும் புதிதல்ல. தனது ஆரம்ப காலத்திலிருந்து எரிமலை விமர்சனங்களுக்கு எதிராக ஏறி நின்று போர்த்தொடுத்து வென்று வருபவர் யுவன்.
இந்நிலையில் இன்று சென்னையில் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் முன்னேற வேண்டும் என்று அறிவுரை வழங்கிப் பேசினார். இதுகுறித்து பேசிய யுவன், “ஆரம்ப காலத்தில் நான் இசையமைத்த படங்கள் தோல்வியடைந்ததால், என்னை தோல்வியான, ராசியில்லாத இசையமைப்பாளர் என முத்திரை குத்திவிட்டார்கள். அதற்குப் பிறகு எனக்கு பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லை. இதை நினைத்து பலமுறை நான் அழுதிருக்கிறேன். இதிலிருந்து மீள வேண்டும் என இசையில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினேன். அதனால்தான் இப்போது உங்கள் முன் நிற்கிறேன்.
எதிர்மறையான விமர்சனங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். பேசுற வாய் பேசிக்கிட்டேதான் இருக்கும். அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளக் கூடாது, முன்நோக்கி நடந்துகொண்டே இருக்க வேண்டும். உங்களை வெறுப்பவர்கள், உங்களை கீழே இழுக்கத்தான் முயற்சிப்பார்கள். நீங்கள் எப்போதும் தலை நிமர்ந்து முன்னோக்கிப் பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதை செய்ததால்தான் நான் இன்று உங்கள் முன் நின்று பேசிக்கொண்டிருக்கிறேன். எதிர்மறையான (NEGATIVITY) விஷயங்களுக்கு என் காதுகள் எப்போதும் மூடியிருக்கும். இசை மற்றும் நேர்மறையான விஷயங்களுக்கு மட்டுமே என் காதுகள் திறந்திருக்கும்” என்று பேசியிருக்கிறார். இதையடுத்து மாணர்வளுக்காக ‘ஒருநாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப்போகாது’ பாடலைப் பாடி உற்சாகப்படுத்தினார்.