இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார்.
2010ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான ஷிகர் தவான், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன், தொடக்க வீரர், மட்டுமல்லாமல் சில போட்டிகளில் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டவர். ஷிகர் தவான் கடைசியாக 2018ம் ஆண்டு டெஸ்ட் தொடரிலும், 2022ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளிலும், 2021ம் ஆண்டு கடைசியாக சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடினார். 39 வயதாகும் இவர், வயது முதிர்வு உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த சில வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்காமல் இருந்தார்.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 24ம் தேதி) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கூறி காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “நாட்டிற்காக விளையாடியதை பெருமையாகக் கருதுகிறேன். எனது நாட்டிற்காக நான் நிறைய விளையாடிவிட்டேன். இனி உனது நாட்டிற்காக உன்னால் விளையாட முடியாதே’ என வருத்தப்படக் கூடாது.
‘இத்தனை நாள்கள் விளையாட வாய்ப்பு கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி கொள்’ என எனக்கு நானே சமாதானம் கூறிக்கொள்கிறேன். இதுவரை என் மீது அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி!” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார். இதையடுத்து சக கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் எனப் பலரும் ஷிகர் தவானின் இந்த ஓய்வு குறித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு, பிரியாவிடை கொடுத்து வருகின்றனர்.
அவ்வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, “அச்சமேயில்லாமல் முதல் வீரராக களத்தில் இறங்கி விளையாடி இந்தியாவின் முக்கியமான கிர்க்கெட் வீராராக, ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இந்திய அணிக்கு பலம் சேர்த்தவர் நீங்கள். உங்களுடைய அந்த வெற்றிச் சிரிப்பையும், கிரிக்கெட் மீது நீங்கள் கொண்ட நேசத்தையும் இனி சர்வதேச கிரிக்கெட்டில் பார்க்க முடியாது என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தம்தான். நிறைய நெகிழ்ச்சியான நினைவுகளை தந்ததற்கு நன்றிகள். உங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்துகள்” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.