மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்-ன் 72-வது பிறந்த நாள் தே.மு.தி.க அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72-வது பிறந்த நாள் விழா வறுமை ஒழிப்பு தினமாக, ‘இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே’ என்ற முறையில் தமிழ்நாடு முழுவதும் கழக தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கேப்டனின் முழு உருவ சிலை, மார்பளவு சிலை என இரண்டு சிலைகள் திறக்கப்பட்டிருக்கிறது.
எம்.ஜி.ஆர் பள்ளிக்கு ரூ.50,000 நன்கொடையும், அந்தப் பள்ளி மாணவர்களுக்கு உணவு, தமிழ்நாடு முழுவதும் பனை விதைகள், ஈரோடு மாவட்டம், அந்தியூர் மலைவாழ் மக்களுக்காக 30 ஆண்டுக்காலம் சேவை செய்து வந்த அப்புசாமி என்பவருக்கு இரு சக்கர வாகனம், டெல்லி தமிழ்ச் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் ஆகியவை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ரூ.1 லட்சம், 20 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
கேப்டன் பிறந்த நாளை முன்னிட்டு தே.மு.தி.க தலைமை அலுவலகம் இனி ‘கேப்டன் ஆலயம்’ எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. எனவே தே.மு.தி.க தலைமை அலுவலகம் இனி ‘கேப்டன் ஆலயம்’ என்றே அழைக்கப்படும். கேப்டன் தேர்தல் அறிக்கையில் வறுமை கோட்டுக்கு கீழ் இல்லாத மக்கள், லஞ்சம், ஊழல் இல்லாத சமூகம், படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, அனைவருக்கும் கல்வி, பாதுகாப்பான குடிநீர், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உணவு, இருப்பிடம், உடை உறுதிப் படுத்துதல், நதிகளை இணைத்தல், சட்ட ஒழுங்கை பாதுகாத்தல் ஆகியவையே அவரின் கனவு எனக் குறிப்பிட்டிருந்தார். அதை நிறைவேற்றுவோம்.
எங்களுக்கு கொடுக்கப்பட்ட அரசுப் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது ஏன் எனத் தெரியவில்லை. கேப்டன் ஆலயத்துக்கு வரும் பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. அவர்கள் சாலையை கடக்க போதுமான வசதிகள் இல்லை. இது குறித்து அரசுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஜிப்ரா கிராஸ், சிக்னல் போன்ற அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நடிகர் விஜய், அவரின் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துகள். முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணம் செல்கிறார். இதற்கு முன்னர் அவர் சென்ற வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் எவ்வளவு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணிக் கட்சிகளுடன் தயாராகி வருகிறோம். கலைஞர் நாணயம் வெளியிட்டதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால், பா.ஜ.க-வின் B-டீம் தி.மு.க தான் என பேசிக்கொள்கிறார்கள். சென்னையில் கார் பந்தயம் நடந்த வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அதற்காக அமைக்கப்பட்ட மைதானத்தை பயன்படுத்தாமல் மக்கள் பயன்பாட்டில் இருக்கும் சாலையை பயன்படுத்துகிறது அரசு. சென்னை மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும், அனைத்து சாலைகளும் சரியில்லாமல்தான் இருக்கின்றன. மக்களுக்கு செய்யவேண்டிய திட்டங்கள் நிறைய இருக்கின்றன.
அதை கவனிக்காமல் இந்த கார் பந்தயம் தேவையற்றது. ரேஷன் கடையில் சரியாக பொருள் கொடுக்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது, போதை மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது. முதலில் அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். கடலூர் மாவட்டத்தில் கேப்டன் பிறந்தநாளுக்காக கொடி ஏற்றும்போது, மின் கம்பத்தில் கொடி உரசி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அவருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். தொழிற்சாலை அமைக்க மக்களின் விவசாய நிலத்தை கையகப்படுத்துவது தவறு. இதில் அரசு கவனமாக செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.