கோவை: நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வழங்குவதில் தொய்வு காணப்பட்டது உண்மை. ஆனால் தற்போது 90 சதவீதம் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என, தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாலை நடந்தது. தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமை வகித்து பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: “ஒவ்வொரு துறைகளிலும் நடைபெறும் பணிகள் குறித்தும் மக்கள் நலன் குறித்தும் முதல்வர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். கோவை மாவட்டத்தில் 1,542 நியாய விலை கடைகள் உள்ளன. 11,42,000 குடும்ப அட்டைகள் மூலம் 34 லட்சம் மக்கள் பயன் பெற்று வருகின்றனர். 6,000 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக தற்போது 750 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சக்கரபாணி உத்தரவின்பேரில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துரிதமாக செயல்படுத்தியுள்ளார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் தற்போது 1 கோடியோ 17 லட்சம் பேர் பேர் பயன்பெற்றுள்ளனர். விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதிவாய்ந்தவர்கள் தொடர்ந்து இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளாக சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நியாயவிலை கடைகளில் பொருட்கள் வழங்கல் பணிகளில் தொய்வு காணப்பட்டது உண்மை. ஆனால் தற்போது 90 சதவீதம் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது” இவ்வாறு முத்துசாமி கூறினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறும் போது, “சாரதா மில் சாலை, பாலக்காடு சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பிரதான சாலைகளில் இரவு நேரங்களில் மட்டும் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் பணி மேற்கொள்ள முடிகிறது. மழை பெய்தல் உள்ளிட்ட காரணங்களால் சிறிது காலதாமதம் ஏற்படுகிறது. முடிந்தவரை பணிகளை துரிதமாக மேற்கொள்ள தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.