கோவை மாவட்ட கல்லூரிகளில் மாணவர்களிடையே கட்டப்பஞ்சாயத்து, போதை மருந்து பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இந்த செயல்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து சுமார் 250 காவலர்களைக் கொண்ட 5 தனிப்படைகள், செட்டிபாளையம், கோவில்பாளையம், சூலூர் ஆகிய காவல் நிலைய பகுதிகளில் மாணவர்கள் தங்கியுள்ள தனியார் விடுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் 8 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஆவர். மேலும் 36 நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில் உரிய ஆவணங்களின்றி இயக்கிய 42 இரு சக்கர வாகனங்கள், அபாயகரமான ஆயுதங்கள், 3 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “போதைப்பொருள்கள் பயன்படுத்துவது, குற்றப் பின்னணி உள்ளவர்களுடன் நட்பு வைத்துக்கொண்டு பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்துதல், ரவுடிசத்தில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்லூரி மாணவர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கும்போது அவர்களது முழு விவரங்களையும் உரிமையாளர்கள் பெற்றுக் கொண்ட பின்னரே வாடகைக்கு விட வேண்டும்.” என்றார்.