சென்னை: திமுக அரசு எல்லோருடைய உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கும் அரசு என்றும் அறநிலையத்துறையின் பொற்காலமே திமுக ஆட்சிதான் என்றும் முத்தமிழ் முருகன் மாநாட்டின் இறுதி நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
மாநாட்டின் இறுதிநாளான இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசியதாவது: “திமுக அரசு திடீரென இந்த மாநாட்டை நடத்துவது குறித்து ஒருசிலர் கேள்வி எழுப்புகின்றனர். இந்த மாநாடு திடீரென நடத்தப்படும் மாநாடு அல்ல. கடந்த மூன்று ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏராளமான சாதனைகளை செய்துவிட்டுதான் இந்த மாநாட்டை நடத்துகிறது.
திமுக அரசைப்பொறுத்தவரை யாருடைய நம்பிக்கைக்கும் குறுக்கே நிற்காத அரசு. எல்லோருடைய உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கும் அரசு. அறநிலையத்துறையின் பொற்காலமே திமுக ஆட்சிதான். திமுகவின் தொடக்கமான நீதிக்கட்சி ஆட்சியின் போதுதான் இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது.
குன்றக்குடி அடிகளார் தந்த விபூதியை நெற்றி நிறைய பூசிக் கொண்டவர்தான் தந்தை பெரியார். பேரறிஞர் அண்ணா ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று முழங்கினார். ஓடாத திருவாரூர் தேரை ஓடவைத்தவர்தான் மு.கருணாநிதி. இப்படிப்பட்ட தலைவர்கள் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறநிலையத்துறை சார்பில்ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
திமுக அரசு அமைந்த இந்த 3 ஆண்டுகளில் மட்டும்1400க்கும் அதிகமான கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. ரூ.5600 கோடி மதிப்பிலான 6 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ரூ.3800 கோடி மதிப்பில் 8500 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்களுக்கு கோயில்களில் உணவு வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கால சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இன்று பழனி கல்லூரி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. அதே போல் மதிய உணவு வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
திராவிடம் என்பது எல்லோருக்கு எல்லாம் என்பது தான். திராவிடம் யாரையும் ஒதுக்காது. எல்லோரையும் இணைக்கும் என்பதற்கு உதாரணம் தான் அனைத்து சாதியினர், மகளிர் அர்ச்சகர்களாக்கிய முதல்வரின் நடவடிக்கை. அதே போல், அன்னைத் தமிழில் அர்ச்சனை என்பது அனைத்து கோயில்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசைப்போல், இந்து சமய அறநிலையத்துறையும் இந்தியாவுக்கே வழிகாட்டி வருகிறது. மக்களுக்கான சாதனைகள் அனைத்தையும் செய்து விட்டுதான் இந்த மாநாட்டை அரசு நடத்துகிறது.
இந்த மாநாடு ஆன்மிக மாநாடாக மட்டுமின்றி, தமிழக பண்பாட்டு மாநாடாகவும் நடைபெறுகிறது. திமுக அரசின் இந்த முயற்சிகளை ஆன்மிகப் பெரியவர்கள், பக்தர்கள் பாராட்டுகின்றனர். இந்த மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்” இவ்வாறு உதயநிதி பேசினார்.