வங்காளதேசத்திற்கு எதிரான தோல்விக்கு அந்த 2 விஷயங்கள்தான் காரணம் – பாக்.கேப்டன் வருத்தம்

ராவல்பிண்டி,

பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் ராவில்பிண்டி பிட்ச் வேகத்துக்கு சாதகமாக என்று நினைத்து இப்போட்டியில் முழுநேர ஸ்பின்னர்களை தேர்ந்தெடுக்கவில்லை என பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார். மேலும் 8 – 9 நாட்கள் முன்பாகவே மழை பெய்ததால் பிட்ச் தாங்கள் நினைத்ததுபோல் அமையாததே தோல்விக்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “எப்போதும் சாக்கு சொல்லவில்லை. பிட்ச் நாங்கள் நினைத்ததுபோல் இல்லை. மேலும் ராவில்பிண்டி மற்றும் இஸ்லாமாபாத் நகரில் வானிலை வேறு மாதிரி இருந்தது. முதல் நாள் தொடங்குவதற்கு 8 – 9 நாட்கள் முன்பிலிருந்தே மழை பெய்தது. பிட்ச் கொஞ்சம் அதிகமாக வேலை செய்யும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். அதனால் அணியில் வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினோம்.

ஆனால் அது தோல்வியில் முடிந்தது. போட்டியை முன்னோக்கி நகர்த்துவதற்காக முன்கூட்டியே டிக்ளேர் செய்தோம். பவுலிங் மற்றும் பீல்டிங் ஆகியவற்றில் நாங்கள் இன்னும் சிறப்பாக செய்திருக்க வேண்டும். டிராவுக்காக நீங்கள் விளையாடும்போது அழுத்தத்தின் கீழ் வேடிக்கையான விஷயங்கள் நடக்கும்.

இப்போட்டியில் செய்த தவறுகளால் அடுத்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். ஸ்பின்னருக்கு எப்போதும் அணிக்குள் இடம் இருக்கும். பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் அசத்திய அமீர் ஜமாலை நாங்கள் இழந்தோம். சிட்னியில் சஜித் கான் அசத்தினார். அதை வைத்து இப்போட்டியில் 4 வேகப்பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுத்தது வேலை செய்யவில்லை. எங்களுடைய சொந்த மண்ணில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பெரிய பாடம் கிடைத்துள்ளது. எனவே இதே சூழ்நிலையில் அதே பழைய தவறை மீண்டும் நாங்கள் செய்யக்கூடாது என்பதே முக்கியமானதாகும்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.