திருப்பதி: கடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை, இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகித்தவர் நடிகை ரோஜா. தமிழர்கள் அதிகம் வசிக்கும் சட்டமன்ற தொகுதியான நகரியில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றவர்.
ஜெகனின் நம்பிக்கைக்கு பாத்திரமான ரோஜா, 2024-ல் நடந்த தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு, தெலுங்கு தேசம் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.அத்தேர்தலில் ஜெகனின் கட்சி படுதோல்வியை சந்தித்ததையடுத்து அக்கட்சியை சேர்ந்தவர்கள் என்னவானார்கள் என மக்கள் கேட்கும் அளவிற்கு அவர்கள் மக்களிடமிருந்து தூரமாகி விட்டனர். இதில் ரோஜாவும் விதிவிலக்கல்ல.
இந்நிலையில், ரோஜாவிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம். அவர் மனம் திறந்து பதிலளித்தார்.
நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழகவெற்றிக் கழகம் கட்சியில் நீங்கள் இணையப்போவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வருகின்றன. அது உண்மையா?
இது தெலுங்கு தேசம் கட்சியின் பொய் பிரச்சாரம். நான் ஏன் விஜய் கட்சியில் இணைய வேண்டும்? எனக்கு விஜய் அவ்வளவு நெருக்கம் கூட இல்லை. பிரஜா ராஜ்ஜியம் கட்சியை சிரஞ்சீவி தொடங்கும் போதே நான் அக்கட்சியில் சேரவில்லை. விஜய் கட்சியில் ஏன் சேரப்போகிறேன்? நான் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியிலேயே நீடிப்பேன். வேறு எந்த கட்சியிலும் சேர மாட்டேன்.
ஜெகன் கட்சி கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு என்ன காரணம் என நீங்கள் நினைக்கிறீர்கள் ?
ஏழை மக்கள் எங்களை தோற்கடிக்கவில்லை. வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிக வாக்குகள் பதிவாகின. அது எப்படிசாத்தியம்? இப்போது தெலுங்கு தேசம் கட்சி யின் நடவடிக்கைகள் கூட சந்தேகமாக உள்ளது. ஜெகனுக்கு இப்போதும் மக்களிடையே வரவேற்பு உள்ளது.
அனகாபல்லி அச்சுதாபுரத்தில் மருந்து தொழிற்சாலை விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த5 ஆண்டுகளில் ஜெகன் ஆட்சியில்இதுபோன்று 119 சம்பவங்கள் நடந்தன என்றும், அதில் 120 பேர் பலியாயினர் என்றும் சந்திரபாபு நாயுடு ஜெகன் ஆட்சி மீது குற்றம் சுமத்தி உள்ளாரே?
அவரது ஆட்சியில் தான் 17 பேர் பலியாகிஉள்ளனர். இதற்கு சந்திரபாபு நாயுடுதான் பொறுப்பேற்க வேண்டும். அதற்கு முன் நடந்த சம்பவங்களுக்கு ஜெகன் அண்ணா பொறுப்பெற்று நஷ்ட ஈடு கூட வழங்கி உள்ளார். மக்களுக்கு எந்தக் கெடுதல் நடந்தாலும் அதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிதான் பொறுப்பு வகிக்க வேண்டுமா ? ஜெகன்முதல்வர் ஆகாததால் பலர் அழுகின்றனர். இது ஆந்திராவிற்கு பெரும் இழப்பு.
உங்கள் கட்சியைச் சேர்ந்த பலர் மீது ஊழல் புகார்களும், கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறதே. உங்கள் மீது கூட ரூ. 100 கோடி ஊழல் புகார் முன் வைக்கப்பட்டுள்ளதே…
இது இந்த அரசின் பழிவாங்கும் செயல். யார் யாரெல்லாம் இந்த அரசை தீவிரமாக விமர்சிக்கின்றனரோ, அவர்கள் மீதெல்லாம் தற்போது பொய் வழக்குகள் போடவும், கைது செய்யவும் சந்திரபாபு நாயுடு அரசு தயாராகி வருகிறது. இதனை மக்கள் கவனித்து வருகிறார்கள். மக்கள் சரியான நேரத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள்.