பாட்னா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் தேர்தல் வியூக நிபுணர், சமூக செயற்பாட்டாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் அரசியல் அமைப்பு அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என அவர் அறிவித்துள்ளார்.
“பிஹாரில் அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் 243 தொகுதிகளிலும் ஜன சுராஜ் போட்டியிடும். இதில் குறைந்தபட்சம் 40 தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவார்கள்” என ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் தெரிவித்தார்.
பிஹார் மாநிலம் முழுவதும் தற்போது அவர் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 2022, அக்டோபர் 2-ம் தேதி இதனை அவர் தொடங்கினர். இதுவரை மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டுள்ள அவர் இதில் சுமார் 5,000 கிலோ மீட்டர்களை கடந்துள்ளார். முன்னதாக, வரும் அக்டோபர் 2-ம் தேதி அன்று தங்களது ஜன சுராஜ் அரசியல் அமைப்பு அரசியல் கட்சியாக உதயமாகும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தேர்தல் வியூகம் சார்ந்த திட்டமிடுதலுக்கு புகழ்பெற்ற ‘ஐ-பேக்’ அமைப்பின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர், பாஜக, ஆம் ஆத்மி, திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என பல்வேறு அரசியல் கட்சிகளுக்காக தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுத்துள்ளார். அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார்.