வனங்கள் நிறைந்த நீலகிரியில், வனவிலங்குகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நவீன ரக துப்பாக்கிகள் மூலம் இரவோடு இரவாக காட்டு மாடுகளை வேட்டையாடி இறைச்சியை வெளி மாநிலங்களுக்கு கடத்துவது முதல் அவுட்டுக்காய் எனும் நாட்டு வெடிகளைக் கொண்டு காட்டுப்பன்றிகளை துடிதுடிக்க கொன்று இறைச்சியை விற்பனை செய்வது வரை அனைத்து மட்டத்திலும் வனவிலங்கு வேட்டை நடந்து கொண்டிருக்கிறது. வனக்குற்றங்களை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வனத்துறை தெரிவித்தாலும் வனக்குற்றங்கள் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், குன்னூர் அருகில் உள்ள காட்டேரி சந்திப்பு பகுதியில் வேட்டை கும்பல் ஒன்று காரில் உலவிக் கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அந்த பகுதியில் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனை மேற்கொள்கையில் காருக்குள் அவுட்டுக்காய் எனப்படும் 3 நாட்டு வெடிகள், சுருக்கு கம்பிகள் உள்ளிட்ட வேட்டை பொருட்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காரில் இருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு சில பொருட்களை பறிமுதல் செய்து, இருவர் மீதும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
கைது குறித்து நீலகிரி வனக்கோட்ட அதிகாரிகள், “குன்னூர், நான்சச் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்(38), கிளன்டேல் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த ராஜன்(40) இருவரும் சேர்ந்து காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடி வந்துள்ளனர் . வீட்டிலேயே அவுட்டுக்காய் தயாரிப்பதும் தெரிய வந்தது.
காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் ராமகிருஷ்ணனின் வீட்டில் சோதனை செய்தோம். நாட்டு வெடி தயாரிக்க பயன்படுத்தப்படும் பச்சை நூல் சுற்றப்பட்ட பட்டாசு, வெங்கச்சாங்கல், கத்தி, தார்பாலின்கள் மற்றும் கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தோம். வீட்டிலேயே நாட்டுவெடி தயாரித்து ராணுவ பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளனர். அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் ” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88