பேஸ்புக் மற்றும் சோசியல் மீடியாவில் அறிமுகமாகும் நண்பர்களை மிரட்டி பணம் பறிப்பது அல்லது மோசடி செய்வது போன்ற செயல்கள், இப்போது அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது. இம்மோசடியால் ஏராளமானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். மும்பை மாகிம் பகுதியைச் சேர்ந்த 46 வயது நபருக்கு பேஸ்புக்கில் டெல்லியைச் சேர்ந்த பூனம் சர்மா என்ற பெண் நட்பு கோரிக்கை அனுப்பி இருந்தார். 46 வயது நபரும் அப்பெண்ணின் நட்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். பூனம், தான் டெல்லியில் ஆசிரியையாக இருப்பதாகத் தெரிவித்தார். அதோடு அடிக்கடி இருவரும் சாட்டிங் செய்து கொண்டனர். ஒரு முறை 46 வயது நபர் பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்தார். அந்நேரம் டெல்லி பெண் வீடியோ கால் செய்தார். அந்த வீடியோ காலை 46 வயது நபர் ஏற்று, பேசினார். அப்பெண்ணும் அவரும் ஆபாசமாக பேசினர்.
அப்பெண் தனது உடைகள் ஒவ்வொன்றாக கழற்றினார். உடனே அதிர்ச்சியில் 46 வயது நபர் வீடியோ காலை கட் செய்துவிட்டார். இதையடுத்து ஓரிரு நாள்கள் கழித்து அப்பெண், இருவரும் பேசிய வீடியோ கால் உரையாடல் மற்றும் வீடியோவை அனுப்பி, அதனை சோசியல் மீடியாவில் பகிரப் போவதாக தெரிவித்தார். இதையடுத்து அடுத்த சில நாள்கள் கழித்து ஒருவர் போன் செய்து தனது பெயர் தினேஷ் குமார் என்றும், டெல்லியில் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதோடு பூனம் சர்மாவும், 46 வயது நபரும் வீடியோ காலில் பேசிய உரையாடல் மற்றும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி இருக்கிறது என்றும், அதனை நீக்கவேண்டுமானால் 21 ஆயிரம் பணம் அனுப்பும்படியும் கேட்டார். 46 வயது நபரும் அந்த நபர் கேட்ட 21 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தார். அடுத்த சில நாள்கள் கழித்து அதே நபர் மீண்டும் 46 வயது நபருக்கு போன் செய்து பூனம் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பூனம் எழுதி வைத்திருக்கும் கடிதத்தில், தங்களது பெயர் மற்றும் போன் நம்பரை எழுதி வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இப்பிரச்னையில் இருந்து விடுவிக்க உதவுவதாகவும், டாக்டர், போலீஸார் மற்றும் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குடும்பத்திற்கு பணத்தை கொடுத்து சரி செய்யலாம் என்று கூறி பணம் கேட்டார். 46 வயது மும்பை நபரும் பல தவணைகளில் ரூ.21.39 லட்சம் அளவுக்கு கொடுத்தார். அப்படி இருந்தும் ஐ.பி.எஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டிருந்தவர் தொடர்ந்து பணம் கேட்டுக்கொண்டே இருந்தார். இதையடுத்து சந்தேகம் அடைந்த மும்பை நபர் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.