மாஸ்கோ: ரஷ்யா – உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. உக்ரைனின் மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நேற்று மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது. இதனால், உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.
ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரி முதல் போர் நடந்து வருகிறது. கடந்த 6-ம் தேதி ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் 1,263 சதுர கி.மீ. பரப்பளவை உக்ரைன் ராணுவம் கைப்பற்றியது. அப்போதுமுதல் இரு நாடுகள் இடையே போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இந்த சூழலில், ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது நேற்று அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சரடோவ் நகரில் 38 மாடிகள் கொண்ட ‘வோல்கா ஸ்கை’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் 28-வது மாடியில், வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ட்ரோன் பயங்கர வேகத்தில் மோதி வெடித்து சிதறியது. அப்போது, அந்த தளம் மட்டுமின்றி, அதற்கு கீழே, மேலே இருந்த (27, 29-வது மாடிகள்) தளங்களும் நிலநடுக்கம் ஏற்பட்டதுபோல குலுங்கின. இதில் ஒரு பெண் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். 3 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. கட்டிட இடிபாடுகள் தரையில் விழுந்ததில், 10 கார்கள் சேத மடைந்தன.
அல்கய்தா தீவிரவாதிகள் கடந்த 2001 செப்டம்பர் 11-ம் தேதி விமானங்களை கடத்தி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடங்கள் மீது மோதினர். இதே பாணியில் அடுக்குமாடி குடியிருப்பு மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
“உக்ரைன் ராணுவம் மொத்தம் 20 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு ட்ரோன், அடுக்குமாடி குடியிருப்பை தாக்கியது. மற்ற ட்ரோன்கள் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்க முயன்றன. ரஷ்ய எல்லையில் அத்துமீறி பறந்த அனைத்து ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்திவிட்டோம்’’ என்று ரஷ்ய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், ஒடெசா உள்ளிட்ட 12 பெருநகரங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நேற்று பலமுனை தாக்குதல்களை நடத்தியது. குறிப்பாக, உக்ரைனின் மின் கட்டமைப்புகளை குறிவைத்து 100 ஏவுகணைகள் வீசப்பட்டன. ரஷ்ய போர் விமானங்கள், 100 ட்ரோன்களும் மின் கட்டமைப்புகளை தாக்கி அழித்தன. இதன்காரணமாக உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. குடிநீர் விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உக்ரைன் பிரதமர் டெனிஸ் கூறும்போது, “ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்’’ என்று தெரிவித்தார்.
எதிரிகளை உள்ளே வரவழைத்து அவர்களை சுற்றிவளைத்து தாக்கும் வியூகத்தை ரஷ்யா பின்பற்றுவதாக தெரிகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் 5,800-க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய ராணுவம் தற்போது நடத்தியுள்ள தாக்குதலில், உக்ரைனின் மின் விநியோக கட்டமைப்பு பெரும்பாலும் அழிந்துவிட்டது. இதை சீரமைக்க பல வாரங்கள் ஆகும் என்று சர்வதேச பாதுகாப்பு துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்தியா சார்பில் அமைதி மாநாடு? – ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூன் 15, 16-ம் தேதிகளில் சுவிட்சர்லாந்தில் அமைதி உச்சி மாநாடு நடத்தப்பட்டது. இதில் அமெரிக்கா உட்பட 92 நாடுகள் பங்கேற்றன. ஆனால், ரஷ்யா புறக்கணித்ததால், மாநாடு தோல்வியில் முடிந்தது.
இந்த சூழலில், இந்தியா சார்பில் 2-வது அமைதி உச்சி மாநாடு நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்னோட்டமாகவே, கடந்த ஜூலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும், சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் பிரதமர் மோடி சந்தித்து, போரை நிறுத்துவது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.