இந்திய அணிக்காக விளையாடும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் புகழின் உச்சிக்கு செல்கின்றனர். ஏதாவது ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடினால் கூட அவர்களை ரசிகர்கள் அதிகம் கொண்டாடுகின்றனர். இருப்பினும் புகழ் மற்றும் கவர்ச்சிக்கு அப்பால், கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை சீக்கிரம் முடிவுக்கு வந்துவிடுகிறது. அவர்களின் வட்டமும் சின்னதாக உள்ளதால், ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் இதனை புரிந்து கொண்டு ஓய்வு பெற்ற பின்பு என்ன செய்ய போகிறோம் என்பதை திட்டமிட தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல்லில் லக்னோ அணியின் கேப்டனாக இருக்கும் ராகுல் 30 வயது ஆனவுடனேயே ஓய்வு பற்றி சிந்திக்க ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளார். தற்போது 32 வயதாகும் கேஎல் ராகுல் தான் ஓய்வு பெறுவதற்கு இன்னும் நீண்ட காலம் இல்லை என்பதை தெரிவித்துள்ளார்.
“எனது கரியர் பற்றிய பல யோசனைகள் தற்போது உள்ளது. இதெல்லாம் விரைவில் முடிந்துவிடும் என்ற உணர்வு வந்துவிட்டது. ஓய்வு பெறுவது வெகு தூரம் இல்லை. கிரிக்கெட்டில் உங்களுக்கு போதுமான உடல் தகுதி இருந்தால், நீங்கள் 40 வயது வரை விளையாடலாம். அதற்கு மேல் விளையாடுவது கடினமான ஒன்று. எம்எஸ் தோனி அவரது 43 வயதிலும் விளையாடி வருகிறார். ஆனால் அது எல்லாருக்கும் சாத்தியம் இல்லை. அனைத்து வீரர்களுக்கும் அது கிடைப்பது இல்லை. எனக்கு 30 வயது ஆன போது பதட்டம் தொடங்கியது. அதற்கு முன்பு வரை ஓய்வை பற்றி நான் சிந்தித்தது இல்லை. நான் எனது 30வது பிறந்தநாளில் தான் இதனை யோசித்தேன். எனக்கு இன்னும் 10 வருடங்கள் தான் கிரிக்கெட் வாழ்க்கை உள்ளது.
இது ஒரு கட்டத்தில் முடிவுக்கு வரும் என்பதை உணர்ந்தேன். என் வாழ்நாள் முழுவதும் நான் செய்ததெல்லாம் ‘கிரிக்கெட், கிரிக்கெட்,கிரிக்கெட்’ தான். ஆனால் அது முடிவுக்கு வருவதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. தற்போது வணிகங்களை பற்றி சிந்திக்க தொடங்கி உள்ளேன். எனது பணத்தை சரியாக முதலீடு செய்வதற்கும் இது உதவும். கிரிக்கெட்டுக்குப் பிறகு என்ன செய்யலாம் என்பதை சிந்தித்து வருகிறேன். நான் ஓய்வு பெற்றாலும் வசதியாக வாழ என்னிடம் பணம் இருக்கும். எனக்கு சில நல்ல நண்பர்கள் உள்ளனர். அவர்களின் உதவி மூலம் ஓய்வுக்கு பிறகு செய்யப்போவதை திட்டமிட்டு வருகிறேன். இது அடுத்து என்ன செய்ய போகிறோம் என்று தெரியாமல் இருப்பதை விட மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று ராகுல் தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பிடிப்பதற்காக செப்டம்பர் 5 முதல் தொடங்கும் 2024 துலீப் டிராபியில் ராகுல் விளையாட உள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய ராகுல் காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு பதில் சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் நடந்து முடிந்த 2024 டி20 உலகக் கோப்பை அணியிலும் அவர் இடம்பெறவில்லை. ஒருநாள் அணியில் இடம் பிடித்தாலும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இடத்தை பெற போராடி வருகிறார். 2025 சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் பெற இப்போது இருந்தே கடுமையான முயற்சிகளை செய்து வருகிறார். மேலும் ஐபிஎல் 2025ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை விட்டு ராகுல் வெளியேற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.