ஹைதராபாத்: ஒரு திரைப்படத்தில் கிணற்றை காணோம் என நடிகர் வடிவேலு செய்த காமெடியை போல், உண்மையாகவே தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் 8 ஏக்கர் ஏரியை காணவில்லைஎன அப்பகுதி மக்கள் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது போலீஸாருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும்,அரசு மற்றும் கோயில் நில ஆக்கிரமிப்புகளையும் காவல் துறை உதவியுடன் வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். சமீபத்தில் ஹைதராபாத்தில் ஏரி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி நடிகர் நாகார்ஜுனாவின் ‘என் கன்வென்ஷன்’ திருமண மண்டபத்தையும், வணிக வளாகத்தையும் ஹைட்ரா அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் முற்றிலுமாக இடித்து தள்ளினர். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. ஹைதராபாத்தில் நடிகர் நாகார்ஜுனாவின் சொத்துகள் மட்டுமின்றி மேலும் பல்வேறு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், மஹேஷ்வரம் மண்டலம், துக்காகூடா எனும் ஊரில் 8 ஏக்கரில் இருந்த ஏரியை யாரோ ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது தொடர்பாக அந்த ஊர் மக்கள், நேற்று அஹாடிஷரீப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதில் ‘‘எங்கள் ஊரில் இருந்த8 ஏக்கர் பரப்பளவு ஏரியை காணவில்லை. தயவு செய்து ஏரியை கண்டுபிடித்து தரவேண்டும்’’ என்று கூறியுள்ளனர். இப்புகாரைபார்த்த அதிர்ச்சியும் ஆச்சர்யமும்அடைந்த போலீஸார், என்ன 8 ஏக்கர் ஏரியை காணவில்லையாஎன கேள்வி எழுப்பினர்.
இதற்கு, ‘‘எங்கள் கிராமத்து ஏரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக வருவாய்த் துறைமற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது போலீஸில் புகார் செய்துள்ளோம்’’ என்று தெரிவித்தனர்.
ஹைதராபாத் ராயதுர்கம் பகுதியில் உள்ள மல்காம் ஏரியும் பல ஏக்கர் அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை ஹைட்ரா அதிகாரிகள் நேற்று போலீஸாரின் பாதுகாப்புடன் ஜேசிபி இயந் திரங்களை கொண்டு இடித்துஅகற்றினர்.