பழநி முருகன் மாநாடு கண்காட்சியை பார்க்க குடும்பம் குடும்பமாக வரும் மக்கள்!

பழநி: பழநியில் முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சியை பார்க்க குடும்பம் குடும்பமாக மக்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள், ஆர்வமுடன் முப்பரிமாணத்தில் (3-டி) முருகன் பாடலை பார்த்து ரசித்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழநியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. மாநாட்டையொட்டி அறுபடை வீடுகள், புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக, மலை வடிவில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப் பட்டு, அதனுள் அறுபடை வீடு கோயில்களில் மூலவர், முருகனின் பெருமைகளை கூறும் புகைப்பட கண்காட்சி, புத்தக விற்பனையகம், 200 பேர் அமர்ந்து பார்க்கும் 3-டி திரையரங்கம் மற்றும் 100 பேர் அமர்ந்து பார்க்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்) அரங்கம் இடம் பெற்றிருந்தன.

மாநாடு முடிந்தும், ஆக.30 வரை, காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் இலவசமாக கண்காட்சியை பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கண்காட்சியை பார்ப்பதற்காக நேற்று ஏராள மானோர் குடும்பம், குடும்பமாக வந்திருந்தனர். அங்கு 3-டியில் முருகனின் பாடலையும், விர்ச்சுவல் ரியாலிட்டியில் (விஆர்) அறுபடை வீடுகளையும் கண்டு ரசித்தனர். மாநாட்டின்போது கண்காட்சியை பார்த்து விட்டு வெளியே வரும் பக்தர்களுக்கு பிரசாத பைகள் வழங்கப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.