Jay Shah: ஐசிசி தலைவர் ஆனார் ஜெய் ஷா… அடுத்த பிசிசிஐ செயலாளர் யார்?

Jay Shah Elected As ICC Chairman: சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) புதிய தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”2019ஆம் ஆண்டு அக்டோபர் முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கெளரவ செயலாளராகவும், 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் ஜெய் ஷா பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஐசிசியின் தலைவராக வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் செயல்படுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐசிசியின் தற்போதைய தலைவர் கிரெக் பார்க்லே தொடர்ந்து இரண்டு முறை இந்த பதவியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாவது முறையாக அவர் போட்டியிடாத நிலையில், ஜெய் ஷா மட்டுமே தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்றும் ஐசிசி வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்…

ஐசிசியின் தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்ட உடன், உலகம் முழுவதும் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவது குறித்தும், அதை நோக்கிய முன்னேற்றத்திற்கான தனது நோக்கத்தை குறித்தும் வெளிப்படுத்தினார். குறிப்பாக, 2028ஆம் ஆண்டில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை சேர்ப்பதன் மூலம் அதன் வளர்ச்சிக்கான ஒரு முக்கிய வாய்ப்பாக ஜெய் ஷா கருதுகிறார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

— ICC (@ICC) August 27, 2024

இளம் ஐசிசி தலைவர் 

35 வயதில் ஜெய் ஷா தேர்வாகியிருப்பதன் மூலம், இளம் வயதில் ஐசிசி தலைவராக பொறுப்பேற்ற பெருமையை அவர் பெறுகிறார். மேலும், ஜெய் ஷா ஐசிசி தலைவராக தேர்வாகியிருக்கும் ஐந்தாவது இந்தியர் ஆவார். இதற்கு முன், ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், சீனிவாசன் மற்றும் ஷஷாங்க் மனோகர் உள்ளிட்டோர் இதற்கு முன் ஐசிசியின் தலைவராக இருந்துள்ளனர். 
 
ஐசிசி தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்றே கடைசி நாளாக கூறப்பட்டது. இன்று வரை ஜெய் ஷாவை தவிர வேறு யாரும் போட்டியிட விண்ணப்பிக்காததால் அவர் போட்டியின்றி தேர்வாகி உள்ளார். ஒருவேளை தேர்தல் நடைபெற்றிருந்தால், ஜெய் ஷாவுக்கு ஐசிசியில் மொத்தம் உள்ள 16 நாடுகளில் 9 நாடுகளின் வாக்குகள் தேவைப்பட்டிருக்கும். ஜெய் ஷா ஏற்கெனவே, ஐசிசியில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக திகழ்ந்தார். அவர் ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரங்கள் (F&CA) என்ற துணைக் கமிட்டியிலும் பணியாற்றுகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இது ஒரு சக்திவாய்ந்த துணைக் கமிட்டியாக பார்க்கப்படுகிறது.    

அடுத்த பிசிசிஐ செயலாளர் யார்?

மேலும், ஜெய் ஷா பிசிசிஐ செயலாளர் பதவியை விரைவில் ராஜினாமா செய்வார் எனலாம். பிசிசிஐயின் ஆண்டு பொதுக்கூட்டம் அடுத்த மாதம் அல்லது அக்டோபரில் நடைபெறும் என கூறப்படுகிறது. டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) தலைவர் ரோகன் ஜெட்லி புதிய பிசிசிஐ செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் வெளியான நிலையில், அதனை அவர் முற்றிலும் நிராகரித்துள்ளார். எனவே யார் பிசிசிஐ செயலாளராக பொறுப்பேற்பார் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மேலும் படிக்க | அழிந்து வரும் இனமாக மாறும் ஆப் ஸ்பின்னர்கள்! அஸ்வினுக்கு பிறகு யார்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.