Jay Shah : `போட்டியின்றி எப்படி ஐ.சி.சியின் தலைவரானார் ஜெய் ஷா?' – விரிவான அலசல்!

உலகக் கிரிக்கெட்டின் முக்கியமான பொறுப்பில் அமர்ந்திருக்கிறார் ஜெய் ஷா. பிசிசிஐயின் செயலாளராக இருந்தவர், போட்டியேயின்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எப்படி இது சாத்தியமானது? இதன்மூலம் என்னவெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது?

Sourav Ganguly and Jai shah

2019 ஆம் ஆண்டில் பிசிசிஐ க்குள் வந்தார் ஜெய் ஷா. தலைவராக கங்குலி மாதிரியாக ஆளுமைமிக்க வீரர் இருந்த சமயத்திலும் ஜெய் ஷா வைப்பதுதான் சட்டமாக இருந்தது. பிசிசிஐயின் முகமாக ஜெய்ஷா தான் பார்க்கப்பட்டார். இவருடைய காலக்கட்டத்தில்தான் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் வீரர்களுக்கு வழங்கப்படுவதை போலவே சம ஊதியம் வழங்கப்பட்டது. வுமன்ஸ் ப்ரீமியர் லீக் தொடங்கப்பட்டது. இந்தியாவில் மீண்டும் ஒரு மிகப்பெரிய உலகக்கோப்பைத் தொடர் நடத்தப்பட்டது. இந்திய அணியும் வெஸ்ட் இண்டீஸிற்கு சென்று உலகக்கோப்பையையும் வென்று வந்தது. இதெல்லாமே ஜெய் ஷாவினுடைய சாதனையாகவும்தான் பார்க்கப்பட்டது. கிரிக்கெட்டின் மிகச்சிறந்த நிர்வாகி என தன்னை நிலைப்படுத்திக் கொண்டார். அதற்கு அவரின் திறனைக் கடந்து பல புறக்காரணிகளுமே காரணமாக இருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

இந்நிலையில்தான் இப்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிலும் தன்னுடைய காலடியை எடுத்து வைத்திருக்கிறார். நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்க்லே என்பவர்தான் ஐ.சி.சியின் தலைவராக இருந்தார். அவரின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையில் ஐ.சி.சி இறங்கியது. ஜெய் ஷா ஐ.சி.சி யின் தலைவர் ஆகப்போகிறார் என்பது போன்ற செய்திகள் ரொம்ப காலமாகவே அடிபட்டுக் கொண்டிருக்கத்தான் செய்தது.ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க ஐ.சி.சி சில நடைமுறைகளை வைத்திருக்கிறது. 17 பேர் கொண்ட ஐ.சி.சியின் இயக்குனர் குழு உறுப்பினர்கள்தான் அடுத்த தலைவராகத் தகுதியடையவர்களை நாமினேட் செய்ய வேண்டும். அவர்கள் நாமினேட் செய்யும் நபர்களுக்கிடையே தேர்தல் நடத்தப்படும். 51% வாக்குகளைப் பெறும் நபர் வெற்றியாளர்.

ICC

வெற்றியாளரைத் தீர்மானிக்க முடியவில்லையெனில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும். இதுதான் நடைமுறை. 17 நபர்கள் கொண்ட இயக்குனர் குழுவில் இப்போது ஒரு உறுப்பினர் பதவி காலியாக இருக்கிறது. ஐ.சி.சியின் முழு நேர உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அசோசியேட் நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட இப்போது 16 பேர் இயக்குனர் பதவியில் இருக்கிறார்கள். இந்த 16 பேரில் பெரும்பான்மையான நபர்கள் ஜெய் ஷா தான் அடுத்த தலைவராக வர வேண்டும் என நாமினேட் செய்திருக்கிறார்கள். இன்னொரு விஷயம், ஜெய் ஷா வை தவிர அவர்கள் வேறு யாரையும் நாமினேட்டும் செய்யவில்லை. இதனால் போட்டியே இன்றி ஜெய் ஷா ஐ.சி.சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். டிசம்பர் 1 ஆம் தேதியிலிருந்து அவர் பொறுப்பில் அமரவிருக்கிறார்.

ஜெய் ஷாவின் நாமினேஷனுக்கு எப்படி அத்தனை நாடுகளும் ஆட்சேபணை தெரிவிக்காமல் ஒத்துக்கொண்டார்கள் என்கிற கேள்வியும் எழும். மற்ற நாடுகள் ஜெய் ஷா வை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் நிறையவே இருக்கிறது. என்னதான் விளையாட்டைப் பற்றி உன்னதமாக பேசினாலும் அதுவும் பொருளாதாரத்தை மையப்படுத்தியேதான் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. ஐ.சி.சி யின் வருமானத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் போர்டுகளின் பங்களிப்புதான் அதிகம். அதிலும் இந்தியாவின் பங்களிப்புதான் பெரும்பான்மையாக இருக்கிறது. அதற்கு இங்கிருக்கும் மிகப்பெரிய சந்தை முக்கிய காரணம். அதனால்தான் ஐ.சி.சி யே பல சமயங்களில் பாரபட்சமாக இந்தியாவுக்கு சாதகமாக நடந்துகொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

Jay Shah & Rohit

சமீபத்தில் நடந்த உலகக்கோப்பையில் கூட மற்ற நாடுகளை விட இந்தியாவுக்கு சாதகமாகவே ஆடும் சூழல் கட்டமைக்கப்பட்டிருந்தது. இதற்கெல்லாம் மற்ற நாடுகளும் எந்த மறுப்பும் தெரிவிக்க இயலாது. ஏனெனில் பிசிசிஐ யின் உதவி ஐ.சி.சிக்கு அதிகமாக தேவைப்படுகிறது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மாதிரியான மற்ற பெரிய போர்டுகளுமே கூட இந்தியாவை சார்ந்துதான் இருக்கின்றன. 2020 கொரோனா சமயத்தில் நாங்கள் டி20 உலகக்கோப்பையை நடத்துவதை விட இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரை நடத்தவே விரும்புகிறோம். அதன்மூலம் எங்களுக்கு அதிக வருமானம் கிட்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்ட் கூறியது. விரும்பியபடியே உலகக்கோப்பைக்கு பதிலாக பார்டர் கவாஸ்கர் தொடரைத்தான் நடத்தியிருந்தது. மேலும், இப்போது லீக் கலாசாரம் பெருகிவிட்டது.

ஒவ்வொரு நாட்டிலும் ஐ.பி.எல் மாதிரியே லீக் தொடர்கள் நடந்துகொண்டிருக்கிறது. வெவ்வேறு நாடுகளில் நடந்தாலும் முக்கியமான லீகுகளிலெல்லாம் ஐ.பி.எல் அணியின் உரிமையாளர்களே அணிகளை வாங்கிப் போட்டிருக்கின்றனர். பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் இந்த லீகுகளில் ஆடி வருகிறார்கள். நிறைய வருமானம் கிடைப்பதால் சர்வதேச போட்டிகளை உதறிவிட்டு முழுமையாக லீக் வீரராக மாறவும் பலரும் தயாராக இருக்கின்றனர். அதற்கான லகான் இந்தியாவின் கையில்தான் இருக்கிறது. நியூசிலாந்து மாதிரியான நாடுகளெல்லாம் ஐ.பி.எல் இல் ஆட வேண்டும் என்பதற்காக சப்பைக் கட்டு கட்டி பாகிஸ்தானுக்கு ஆட செல்லாமல் தவிர்த்த சம்பவமெல்லாம் நடந்திருக்கிறது. ஆக, கிரிக்கெட்டை சுற்றி நிற்கும் வணிகம்தான் ஜெய் ஷாவை இப்போது அந்த ஐ.சி.சியின் தலைவர் என்கிற பதவிக்கு போட்டியே இல்லாமல் தேர்வாக வைத்திருக்கிறது.

Olympics

இவர் தலைவராகியிருக்கும் காலக்கட்டம் ரொம்பவே முக்கியமானது. பதவிக்காலம் முடிந்தாலும் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதால் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸின் போதுமே அவர்தான் ஐ.சி.சியின் தலைவராக இருப்பார். ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவிட்டால் அதற்கான க்ரெடிட்டும் ஜெய் ஷாவுக்குதான் சென்று சேரும்.

இந்திய கிரிக்கெட் வழக்கம்போல தடையின்று ஓடிக்கொண்டுதான் இருக்கப்போகிறது. ஆனால், இந்தியா – பாகிஸ்தான் என ஒரு அரசியல் இருக்கிறதல்லவா, அதற்கு மட்டும் முற்றுப்புள்ளி ஏற்பட வாய்ப்பே இல்லை. 2025 பிப்ரவரியில் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடக்கவிருக்கிறது. அதில் ஆட நாங்கள் பாகிஸ்தானுக்கு செல்லவே மாட்டோம் என்கிற நிலைப்பாட்டில் இந்தியா இருக்கிறது. ஜெய் ஷா ஐ.சி.சியின் தலைவராகியிருப்பதன் மூலம் இந்தியாவின் கை இந்த விஷயத்தில் மேலும் ஓங்கி இருக்கிறது.

ஜெய் ஷாதான் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும் கூட. கடந்த ஆண்டு உலகக்கோப்பைக்கு முன்பாக ஆசியக்கோப்பை நடந்திருந்தது. இலங்கையும் பாகிஸ்தானும்தான் தொடரை நடத்தின. மற்ற எல்லா அணிகளும் பாகிஸ்தானுக்கு சென்று ஆடியிருக்க, இந்தியா மட்டும் பாகிஸ்தானுக்கு சென்று ஆட வேண்டாதபடிக்கு கோக்குமாக்காக ஒரு போட்டி அட்டவணையை வடிவமைத்தார்கள். வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கும் அப்படி ஏதாவது செய்ய அதிக வாய்ப்பிருக்கிறது.

Jay Shah

ஜெய் ஷா கட்டாயம் அதிக அதிகாரம் பொருந்திய தலைவராக இருப்பார். அவர் தனிப்பட்ட அல்லது பிசிசிஐயின் விருப்பு வெறுப்புகள் சார்ந்து இயங்காமல் கிரிக்கெட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இயங்க வேண்டும் என்பதே கிரிக்கெட் ஆர்வலர்களின் விருப்பம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.