‘‘ஆப் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யும்போது பிரச்னை வருமா..?”

”என்னிடம் ஒரு பழைய புல்லட் இருக்கிறது. அதை நான் பல ஆண்டுகளுக்கு முன் 50,000 ரூபாய்க்கு வாங்கினேன். அதை யார் இப்போது அதிக விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறீர்கள்?” இப்படி ஒருவர், ஒரு கூட்டத்தில் கேட்டால்… என்ன மாதிரியான பதில்கள் வரும்?

வந்தவை… ஆச்சர்யப்படத்தக்க பதில்களே!

நாணயம் விகடனும் ஆம்ஃபி அமைப்பும் சேர்ந்து ‘முதலீடுகளும் நீங்களும்’ என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆகஸ்ட் 17-ம் தேதி ஈரோட்டிலும், ஆகஸ்ட் 18-ம் தேதி திருப்பூரில் நடத்தின. அதில், இந்தக் கேள்வி, திருப்பூர் மேடையில் எழுப்பப் பட்டது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாசகர்கள்…

இந்த நிகழ்ச்சிகளில் எழுத் தாளர், பேச்சாளர், முதலீட்டு ஆலோசகர் சோம.வள்ளியப் பனும், நிதி நிபுணர் ஏ.கே.நாராயணும் மற்றும் நிப்பான் இந்தியா லைஃப் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் சந்தோஷ் ஜெகநாதனும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

ஏ.கே.நாராயண் பேசும்போது, “ஒவ்வோர் ஆண்டும் அரசாங்கம் பட்ஜெட் தாக்கல் செய்கிறது. அந்த பட்ஜெட் பற்றி விவாதம் செய்கிறோம், கருத்து சொல்கிறோம். ஆனால், நமது வீட்டு பட்ஜெட் போட்டு வரவு, செலவு, சேமிப்பு மற்றும் முதலீட்டுக் கணக்குகளை சரிபார்க்கிறோமா என்றால் கேள்விக்குறிதான். முதலில் நாம் ஒவ்வொருவரும் குடும்ப பட்ஜெட் போடு வதைக் கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு மாதமும் தவறாமல் நம்மால் நிதியை ஒதுக்கி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்.

சந்தோஷ் ஜெகநாதன், ஏ.கே.நாராயண்

இன்றைய நிலையில் நிதி மோசடிகள் அதிகம் நடக்கின்றன. முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டங்களில் ஆண்டுக்கு அதிகபட்சம் 12% வருமானம் கிடைக்கும் என்கிற போது, முறைப்படுத்தப்படாத பொன்சி திட்டங்களில் யாராலும் ஆண்டுக்கு 100% வருமானம் கொடுக்க முடியாது. பணத் தாசையைத் தூண்டும் வகை யிலான மோசடித் திட்டங்களில் இருந்து மக்கள் விலகியிருப்பது நல்லது” என்றார்.

சோம.வள்ளியப்பன் பேசும்போது, “பெரும்பாலான இளைஞர்கள் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ஆப் மூலம் முதலீடு செய்வது அதிகரித்திருக்கிறது. ஆப் என்பது முதலீடு செய்வதை எளிமைபடுத்திக் கொடுக்கும் ஒரு டூல் என்பதை உணருங்கள். அங்கு கொடுக்கும் பரிந்துரைபடி முதலீடு செய்வது ஏற்புடையது அல்ல. முதலீடு சார்ந்த விவரங்களைச் சுயமாக ஆராய வேண்டும். தேவை எனில் நிதி நிபுணர் உதவியை நாடலாம்.

வேலைக்குச் சேர்ந்த கையுடன் தன் மகனுக்கோ, மகளுக்கோ கல்யாண பேச்சை ஆரம்பிப்பதுபோல, அவர்களது சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை எஸ்.ஐ.பி-க்கு, வி.பி.எஃப்-க்கு எனத் தனித்தனியாக ஒதுக்கி முதலீட்டை மேற்கொள்வதற்கான வழிவகை களை ஏற்படுத்திக் கொடுப்பது பெற்றோர்களின் கடமை. முதலீடுகளை ஆரம்பிப்பதற்கு முன்பாக அவர்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுங்கள்.

ஒரே ஃபண்ட், ஒரே பங்கு அல்லது ஈக்விட்டி சார்ந்த ஃபண்டுகளில் மட்டுமே முதலீடு செய்வது, ஒரு துறை சார்ந்த பங்குகளில் மட்டுமே முதலீட்டை மேற்கொள்வது என மொத்தமாகப் பணத்தை ஒரே இடத்தில் குவித்து வைக்காமல், ஈக்விட்டி, ஹைப்ரிட், டெப்ட் எனப் பிரித்து முதலீடு செய்யுங்கள்” என்றார்.

“என்னிடம் ஒரு பழைய புல்லட் இருக்கிறது. அதை நான் பல ஆண்டுகளுக்கு முன் 50,000 ரூபாய்க்கு வாங்கினேன். அதை யார் இப்போது அதிக விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறீர்கள்?” என்று சந்தோஷ் ஜெகநாதன் கேட்க, “ரூ.1,00,000-க்கு வாங்கிக்கொள்கிறேன், ரூ.3,00,000-க்கு வாங்கிக்கொள்கிறேன்…” என வாசகர்கள் சொல்ல, “என் புல்லட்டை அதிக விலைக்குக் கேட்டவருக்கே கொடுத்து விடுகிறேன்” என சந்தோஷ் நகைச்சுவையாக சொல்ல… அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.

பிறகு, நான் ஏன் இப்படிச் சொன்னேன் என்பதற்கான விளக்கத்தை அவரே கொடுத் தார். “அதாவது, பழைய புல்லட் என்றாலும்கூட, சிறந்த நிறுவனத்தில் இருந்து வெளியான தரமான புல்லட் என்பதால், அதற்கு கூடுதல் விலை கொடுத்து நீங்கள் வாங்கத் தயாராக இருக்கிறீர்கள். அந்த புல்லட் தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குகளையும் சேர்த்து நான் அப்போதே வாங்கியிருந்தால்… பங்கு விலை ஏற்றத்தால் நான் இப்போது கோடீஸ்வரன் ஆகியிருக்க முடியும். அதுபோலதான் நீண்ட கால அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நீங்கள் மேற்கொள்ளும் முதலீடு களும் பல்கிப் பெருகி உங்களைக் கோடீஸ்வரர் ஆக்கும்” என்றார்.

மொத்தத்தில், பணத்தைப் பெருக்கும் சூட்சுமங்களைச் சொல்லித்தந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்குமே மகிழ்ச்சி!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.