கொழும்பு: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இரண்டு நாள் பயணமாக கொழும்பு சென்றுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வியாழன் (ஆகஸ்ட் 29) காலை கொழும்பு சென்றடைந்தார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. கொழும்பில் அரசியல் தலைவர்களை அஜித் தோவல் சந்திக்க உள்ளார். எனினும், அஜித் தோவலின் இலங்கைப் பயணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இலங்கையில் செப்டம்பர் 21ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அஜித் தோவலின் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கொழும்பில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இந்திய உயர் அதிகாரிகள் அழைப்பு விடுத்திருப்பதாக அக்கட்சிகளின் பிரதிநிதிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்திய உயர் அதிகாரியுடனான சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகள் இடையே ஏற்படுத்தப்பட்ட கூட்டமைப்பு, தற்போது விரிவிடைந்துள்ளது. இதில், மொரிஷியஸ் மற்றும் வங்கதேசம் ஆகியவை உறுப்பினர்களாக சேர்ந்துள்ளன. சீஷெல்ஸ் பார்வையாளராக இணைந்துள்ளது. இந்த அமைப்பின் பாதுகாப்பு சார்ந்த மாநாடு கொழும்பில் நடைபெற உள்ள நிலையில், அது தொடர்பான விவாதங்களை அஜித் தோவல் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிராந்திய அளவிலான இந்த கூட்டமைப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் 6வது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் மொரீஷியசில் நடைபெற்றது. இதன் அடுத்த கூட்டம் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் நடைபெறும் என்று கடந்த மாதம் வெளியிடப்பட்ட வெளியுறவு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டமைப்பின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவிலான கூட்டம் கடந்த ஜூலை 10ம் தேதி நடைபெற்றது. இதில், ஐந்தாவது உறுப்பு நாடாக வங்கதேசம் இணைந்தது. சீஷெல்ஸ் பார்வையாளராகப் பங்கேற்றது.